கோலாலம்பூர்:
வெள்ள அபாயத்தைக் குறைக்கும் வகையில், சிலாங்கூர் நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை (DID) ஊடாக ஷா ஆலம் பகுதியில் மூன்று உடனடி வெள்ளத் தடுப்புத் திட்டங்களை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. இதன் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு (2027) பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்குள் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (நவம்பர் 25) நடைபெற்ற மக்களவையின் சிறப்பு அமர்வில் ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்லி யூசோப் எழுப்பிய கேள்விக்கு, எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்றத் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் ரஹ்மான் முகமட் இவ்வாறு பதிலளித்தார்.
இதனை சீர்ப்படுத்துவதற்கு மூன்று உடனடி வெள்ளத் தடுப்புத் திட்டங்களை முன்மொழிந்தார், அதில் தாமான் ரஷ்னாவில் RM350,000 செலவில் வெள்ளத் தடுப்புச் சுவர் மற்றும் நீர் வெளியேற்றும் கதவு அமைக்கும் பணி 2027 மார்ச் 17-ஆம் தேதிக்குள் நிறைவடையும்.
புக்கிட் ராஜா சந்திப்பு RM199,000 செலவில் நீர் வெளியேற்றும் கட்டமைப்பு, ‘பிளாப் கேட்’ மற்றும் வெள்ளத் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி 2027 பிப்ரவரி 17-ஆம் தேதிக்குள் நிறைவடையும்.
தாமான் இந்தான் RM200,000 செலவில் வெள்ளத் தடுப்புச் சுவர் அமைக்கும் பணியும் 2027 பிப்ரவரி 17-ஆம் தேதிக்குள் நிறைவடையும்.
மேலும் வெள்ள நீர் தேங்குவதைத் தடுக்க தாமான் ரஷ்னா, தாமான் இந்தான், புக்கிட் ராஜா சந்திப்பு மற்றும் ஏயோன் (AEON) பேரங்காடி ஆகிய 4 அதிக ஆபத்துள்ள பகுதிகளில் 6 நடமாடும் நீர் இறைக்கும் இயந்திரங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் சொன்னார்.
அத்தோடு 13-வது மலேசியத் திட்டத்தின் (13MP) கீழ், சுங்கை ராசா முகத்துவாரத்தில் நீர்க் கட்டுப்பாட்டுக் கதவு, நீர் இறைக்கும் நிலையம் (Pump house), வெள்ள நீர் தேக்கக் குளம் மற்றும் ஆற்றங்கரைத் தடுப்புச் சுவர்கள் அமைக்க RM40 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட வடிவமைப்பு நிலையில் உள்ள இப்பணி 2028-இல் தொடங்கி 2031-இல் முடிவடையத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், பணிகளை விரைவுபடுத்தும் நோக்கில் இத்திட்டத்தை இரு ஒப்பந்தப்புள்ளிகளாகப் (Tenders) பிரித்து, 2029-ஆம் ஆண்டிற்குள்ளேயே கட்டி முடிக்க அமைச்சு பரிந்துரைத்துள்ளது.
சுங்கை கிள்ளான் ஆற்றிலிருந்து வெள்ள நீர் ஷா ஆலமின் தாழ்வான பகுதிகளுக்குள் புகுவதைத் தடுப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும், இதற்கு மட்டும் RM15 மில்லியன் முதல் RM20 மில்லியன் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் துணை அமைச்சர் தெரிவித்தார்.
இத்திட்டங்கள் முழுமையடையும்போது சுங்கை ராசா படுகையில் வெள்ளக் கட்டுப்பாட்டு அமைப்பு மேலும் வலுப்பெற்று, குடியிருப்பாளர்களுக்கு ஏற்படும் வெள்ள பாதிப்புகள் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.






















