கோலாலம்பூர்:
ஜாலான் ஜெலாத்தேக் பகுதியில் அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி, ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவரின் உயிரிழப்புக்குக் காரணமானதாகக் குற்றம் சாட்டப்பட்ட லிபியப் பல்கலைக்கழக மாணவர், தனது நாட்டுத் தூதரகத்தின் உதவியுடன் 17,000 ரிங்கிட் பிணைத் தொகையைச் செலுத்தி விடுவிக்கப்பட்டுள்ளார்.
தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் முதுகலைப் பட்டப்படிப்பு பயின்று வரும் 32 வயதான அலி அப்துல் ரஹ்மான் மஹ்மூத் எல்மாகி, நேற்று மாஜிஸ்திரேட் அமலினா ஜோஹர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது தம்மீதான குற்றச்சாட்டை மறுத்து, தாம் குற்றமற்றவர் என மனுத் தாக்கல் செய்தார்.
கடந்த நவம்பர் 21-ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில், வங்சா மாஜுவிலிருந்து தாமான் கெராமாட் நோக்கி ‘புரோட்டான் சாகா’ (Proton Saga) காரை அபாயகரமான முறையில் ஓட்டிச் சென்று, 43 வயதான முகமது ஹைரேசாம் ஓமர் என்பவரின் மரணத்திற்குக் காரணமானதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 41(1)-இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், 20,000 முதல் 50,000 ரிங்கிட் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.























