கோலாலம்பூர்,
மலேசியாவின் 70ஆம் ஆண்டு சிறப்பைக் கொண்டாடும் வகையில், கோலாலம்பூரை அனைத்துலகத் தரம் வாய்ந்த இரவுநேர சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் நோக்கில் ‘I Lite U 2.0’ திட்டத்தை வீடமைப்பு, ஊராட்சித் துறை அமைச்சு முன்னெடுத்துள்ளது.
கோலாலம்பூர் பெவிலியனில் நடைபெற்ற இத்திட்டத்தின் முன்னோட்ட அறிமுக விழாவை வீடமைப்பு, ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் அண்மையில் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் ஜாலான் புக்கிட் பிந்தாங் நெடுகிலும் அலங்கார மின்விளக்கு வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் RM2 மில்லியனை ஒதுக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கோலாலம்பூர் மாநகர் மன்றத்தால் மேற்கொள்ளப்படும் இப்பணிகள் டிசம்பர் மாத மத்தியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவீன அலங்கார மின்விளக்குகள், முப்பரிமாண பட்டாம்பூச்சி வடிவ விளக்குகள், நடைபாதைகளில் ஒளிக்காட்சிகள் மற்றும் சுற்றுலா விளம்பரப் பலகைகள் ஆகியவை இதில் இடம்பெறவுள்ளன.
இதனிடையே, நாட்டிற்குப் பெருமை சேர்த்த டத்தோஸ்ரீ சித்தி நூர்ஹலிசா, டத்தோ நிக்கோல் டேவிட், எல்லா அமினுடின், தனுஷியா செட்டி உள்ளிட்ட கலை, விளையாட்டு மற்றும் சமூகத் துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்களும் இத்திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
வரும் 2027 ஜனவரி 2ஆம் தேதி புக்கிட் பிந்தாங் பெவிலியன் வளாகத்தில் நடைபெறவுள்ள பிரமாண்ட புத்தாண்டு அணிவகுப்புக் கொண்டாட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கவுள்ளார்.
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, இசைக்குழுக்களின் படைப்புகள், வாணவேடிக்கைகள் மற்றும் உள்ளூர்க் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இக்கொண்டாட்டத்தில் இடம்பெறவுள்ளன.
இத்திட்டத்தின் வாயிலாக கோலாலம்பூரின் சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்துவதோடு, பாதுகாப்பான, நவீன மற்றும் நிலைத்தன்மைமிக்க மாநகரை உருவாக்க மடானி அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.























