கோலாலம்பூர்,
மலேசியாவில் சிக்கலுக்குள்ளான மற்றும் கைவிடப்பட்ட தனியார் வீடமைப்புத் திட்டங்களுக்கு புத்துயிர் அளிப்பதில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய வீடமைப்பு, ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங்கிற்கு ‘தி எட்ஜ் மலேசியா’வின் சிறந்த பொதுச் சேவை விருது வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு வீடமைப்பு, ஊராட்சித் துறை அமைச்சின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்புப் பணிக்குழு, இவ்வாண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை 199,643 வீடுகளை உள்ளடக்கிய 1,726 வீடமைப்புத் திட்டங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டுள்ளது. இத்திட்டங்களின் மொத்த மேம்பாட்டு மதிப்பு RM158.16 பில்லியனாகும்.
கோலாலம்பூர் செயின்ட் ரெஜிஸ் தங்கும் விடுதியில் கடந்த நவம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற ‘தி எட்ஜ் மலேசியா சொத்துடைமைச் சிறப்பு விருது 2026’ விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.
இந்த விருது தனிப்பட்ட சாதனைக்கான அங்கீகாரம் அல்ல என்றும், அமைச்சின் அதிகாரிகள் அனைவரது கூட்டு முயற்சிக்குக் கிடைத்த அங்கீகாரம் என்றும் ஙா கோர் மிங் தெரிவித்தார்.
பல ஆண்டுகளாகத் தங்களது கனவு இல்லங்களுக்காகக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள், வீட்டுக் கடனைச் செலுத்துவதோடு வாடகைச் சுமையையும் எதிர்நோக்கி வருகின்றன. இத்திட்டங்களுக்கு புத்துயிர் அளிப்பதன் மூலம் அக்குடும்பங்களின் நம்பிக்கையும் மீட்டெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, வீடு வாங்குவோரின் நலன்களைப் பாதுகாக்கவும் மேம்பாட்டாளர்களின் பொறுப்புணர்வை வலுப்படுத்தவும் மடானி வீடமைப்புச் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வரும் 2030ஆம் ஆண்டுக்குள் சிக்கலுக்குள்ளான வீடமைப்புத் திட்டங்களே இல்லாத நிலையை உருவாக்க அமைச்சு இலக்கு கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.























