RMAF பணியாளர்கள் சம்பந்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய சூத்திரதாரி கைதில் இருந்து தப்பி விட்டார்- சைஃபுதீன்

மலேசிய அரச விமானப்படை (RMAF) பணியாளர்கள் சம்பந்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய சூத்திரதாரியை காவல்துறை அடையாளம் கண்டுள்ளது. இருப்பினும், அவர் பிடிபடாமல் தப்பிவிட்டார் என்று உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் கூறியுள்ளார். அந்தச் சந்தேக நபரைத் தேடும் பணியை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளதாக ‘ஹாரியன் மெட்ரோ’  செய்தி வெளியிட்டுள்ளது.

நாங்கள் முக்கிய சூத்திரதாரியை அடையாளம் கண்டுவிட்டோம். ஆனால், சந்தேக நபர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்தபோது அவர் தப்பிவிட்டார். இருப்பினும், அவர் காவல்துறையின் கண்காணிப்பில் இருக்கிறார் என்று கெடாவின் பாலிங் பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின்போது செய்தியாளர்களிடம் அவர் கூறினார். நவம்பர் 17 அன்று சுபாங் விமானப்படை தளத்தில் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான சோதனையின்போது, ​​96.64 கிலோ மெத்தாம்பேத்தமைன் (methamphetamine) மற்றும் 6.98 கிலோ வேதிப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, மலேசிய அரச விமானப்படையைச் சேர்ந்த 8 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட மொத்தம் 18 பேர் (10 பொதுமக்கள் உட்பட) கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று ஷா ஆலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், மலேசிய அரச விமானப்படையைச் சேர்ந்த மூன்று விமானிகள் மற்றும் மூன்று பொதுமக்கள் மீது, 1952ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39Bன் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இந்தக் கும்பலில் நிதி வழங்குபவர், திட்டமிடுபவர், கடத்துபவர், பொருட்களைக் கொண்டு செல்பவர், தகவல் தருபவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என ஒவ்வொருவரின் பங்கையும் காவல்துறை கண்டறிந்துள்ளதாக சைஃபுதீன் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களைக் கண்டறிய விசாரணை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

நமது நாட்டிற்குள் வரும் போதைப்பொருட்கள் பெரும்பாலும் ‘கோல்டன் ட்ரையாங்கிள்’ (Golden Triangle) பகுதியிலிருந்தே வருகின்றன. போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தங்கள் விசாரணையை முழுமையாக முடிக்கட்டும். அவர்கள் இந்த வலையமைப்பை விரிவுபடுத்தி, இதில் தொடர்புடைய மேலும் பல சந்தேக நபர்களைத் தேடி வருகின்றனர்  என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here