கூச்சிங்,
சரவாக் மாநிலத்தின் 13ஆவது சட்டமன்றத் தேர்தலில் கெடோங் தொகுதியில் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார் சரவாக் இடைக்காலப் பிரதமரும் சரவாக் கட்சிகள் கூட்டணியின் (ஜிபிஎஸ்) தலைவருமான டான்ஸ்ரீ அபாங் ஜொஹாரி ஓபெங்.
இன்று நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலின்போது அவரது வேட்புமனு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, காலை 10.06 மணிக்கு அவர் போட்டியின்றி வெற்றி பெற்றதாகத் தேர்தல் அதிகாரி ஜமாயின் வஹாப் அறிவித்தார்.
அபாங் ஜொஹாரி இன்று காலை 9.15 மணிக்குத் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.
1981ஆம் ஆண்டு முதல் சாத்தோக் சட்டமன்றத் தொகுதியை ஒன்பது தவணைகள் பிரதிநிதித்துவப்படுத்திய அபாங் ஜொஹாரி, 2021ஆம் ஆண்டு நடைபெற்ற 12ஆவது சரவாக் மாநிலத் தேர்தலில் கெடோங் தொகுதியில் முதன்முறையாக வெற்றி பெற்றார். தற்போது 11ஆவது முறையாக அவர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, துப்போங் சட்டமன்றத் தொகுதியில் ஜிபிஎஸ் வேட்பாளர் டத்தோ ஃபஸ்ருடின் அப்துல் ரஹ்மானும் போட்டியின்றி வெற்றி பெற்றதாக இன்று காலை 10.09 மணிக்கு அறிவிக்கப்பட்டது.
2016ஆம் ஆண்டு முதன்முறையாக துப்போங் தொகுதியில் வெற்றி பெற்ற அவர், 2021ஆம் ஆண்டிலும் அத்தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டார். தற்போது மூன்றாவது தவணையாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்னரே சரவாக் கட்சிகள் கூட்டணி இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.























