தேசத்துரோகச் சட்டத்திற்குப் பொருத்தமான மாற்று இல்லை என்று பிரதமர் அன்ர் இப்ராஹிம் மக்களவையில் தெரிவித்ததைத் தொடர்ந்து, டிஏபி தேசியத் தலைவர் கோபிந்த் சிங் டியோ, தேசத்துரோகச் சட்டத்தை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாக தேசிய நல்லிணக்கச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். 1948ஆம் ஆண்டு சட்டத்தை ஒழிக்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டில் டிஏபி உறுதியாக இருப்பதாக கோபிந்த் கூறினார். அந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்றும், அது எதிர்ப்புக் குரல்களை ஒடுக்கப் பயன்படுத்தப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உண்மையான தீங்கைக் காட்டிலும், உணரப்பட்ட ‘போக்கை’ மட்டும் கண்காணிக்கும் ஒரு பொதுவான சட்டம், முறையான அரசியல் கருத்துக்களுக்கு ஒரு அச்சமூட்டும் விளைவை ஏற்படுத்துகிறது மற்றும் பொதுப் பொறுப்புடைமையை நசுக்குகிறது என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார். இன நல்லிணக்கம், மத உணர்வுகள், அரச நிறுவனத்தைப் பாதுகாப்பது முக்கியம், ஆனால் காலாவதியான ஒரு காலனித்துவச் சட்டத்தைத் தக்கவைத்துக் கொள்வது மட்டுமே அதற்கான ஒரே வழி அல்லது சிறந்த வழி அல்ல என்றும் அவர் கூறினார்.
டிஜிட்டல் அமைச்சராகவும் இருக்கும் கோவிந்த், மலேசியாவில் இதுபோன்ற குற்றங்களைக் கையாள்வதற்கு ஏற்கெனவே பல சட்டங்கள் உள்ளன என்று சுட்டிக்காட்டினார். அவற்றுள், தண்டனைச் சட்டத்தின் 298, 298A, 504 மற்றும் 505 ஆகிய பிரிவுகள், 1998 ஆம் ஆண்டின் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233 ஆம் பிரிவு மற்றும் 2025 ஆம் ஆண்டின் இணையப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவை அடங்கும். எனவே, இன மற்றும் மத வெறுப்புக் குற்றங்கள், தேசிய நல்லிணக்கம், சமரசம் குறித்த குறிப்பிட்ட விதிகளை உள்ளடக்கிய ஒரு பிரத்யேக தேசிய நல்லிணக்கச் சட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
தேசிய நல்லிணக்கச் சட்டம் என்ற யோசனை புதியதல்ல. 2012 ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் நஜிப் ரசாக், தேசத்துரோகச் சட்டம் ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக அத்தகைய சட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவித்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தேசிய ஒற்றுமை ஆலோசனைக் குழு, இன, மத வெறுப்புக் குற்றங்கள், தேசிய நல்லிணக்கம், சமரசம், புகார்களை விசாரிக்க ஒரு ஆணையத்தை அமைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்று வரைவு மசோதாக்களை முன்மொழிந்தது. இருப்பினும், அரசாங்கம் பின்னர் அதற்குப் பதிலாக தேசத்துரோகச் சட்டத்தைத் தக்கவைத்து வலுப்படுத்த முடிவு செய்தது.
தேசத்துரோகச் சட்டம் மறுஆய்வு செய்யப்பட்டு வருவதாக தற்போதைய அரசாங்கம் கூறியுள்ளது. மேலும், அது அமலில் இருக்கும் வரை குறைவாகவே பயன்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் ஜனவரி மாதம் தெரிவித்திருந்தார். பக்காத்தான் ஹராப்பான் தனது 2018 பொதுத்தேர்தல் தேர்தல் அறிக்கையில், ஒடுக்குமுறைச் சட்டங்களை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தும் 27ஆவது வாக்குறுதியின் கீழ், தேசத்துரோகச் சட்டத்தை (Sedition Act) ரத்து செய்வதாக உறுதியளித்திருந்தது. இந்தச் சட்டத்தை ரத்து செய்வது குறித்த தனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று ஏப்ரல் மாதம் கோபிந்த் தெரிவித்தார். இருப்பினும், ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கட்சிகளிடையே நிலவும் கருத்து வேறுபாடுகள் காரணமாக, இந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போனது.















