ஒழுக்கக் கேடான நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் 84 வெளிநாட்டவர்கள் உட்பட 161 பேர் கைது

கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங்கில் உள்ள ஒரு கரோக்கி மையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புக்கிட் அமானின் குற்றத் தடுப்புப் பிரிவு (D7) நடத்திய சோதனையில், வாடிக்கையாளரை கவர பெண் பணியாளர்களை தெரிவு அடிப்படையில் அமர்த்திய அவ்வளாகத்தின் தந்திரோபாயம் வெளிச்சத்திற்கு வந்தது.

அதிகாலை 1.10 மணிக்கு நடத்தப்பட்ட சோதனையில், 161 பெண் வரவேற்பாளர்கள் மற்றும் வளாகத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர் என்று, போலீஸ் படை தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் கூறினார்.

ஆய்வின் விளைவாக, அவர்களில் 84 பேர் வெளிநாட்டுப் பெண்கள் என்றும், 22 உள்ளூர் பெண்களும் வரவேற்பாளர்கள் என்ற போர்வையில் சமூக சீர்கேடான செயல்களை செய்துவந்ததாக சந்தேகிக்கப்படுகிறார்கள், மற்றய 55 பேரில் அவ்வளாகத்தின் மேலாளர்கள், கவுண்டர் கீப்பர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோர் அடங்குவர்.

18 முதல் 46 வயதுக்குட்பட்ட அனைவரும் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அங்கிருந்த 336 வாடிக்கையாளர்களையும் பரிசோதித்ததில், அவர்களில் ஆறு பேர் மெத்தம்பேட்டமைன் மற்றும் கெட்டமைனுக்கு நேர்மறையாக இருப்பது கண்டறியப்பட்டது என்றார்.

இந்த நடவடிக்கையில் கைத்தொலைபேசிகள், வீடியோ ரெக்கார்டர்கள், மோடம்கள், ரூட்டர்கள், கரோக்கி பெட்டிகள் மற்றும் மதுபானங்கள் மற்றும் RM3,862 ரொக்கப் பணம் உள்ளிட்ட பல்வேறு சான்றுப்பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் மற்றும் அனைத்து பறிமுதல்களும் டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு (IPD) கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.

அத்தோடு கோலாலம்பூர் நகராண்மை கழகம் (DBKL) வழங்கிய உணவக உரிமத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும் மற்றும் செல்லுபடியாகும் உரிமம் இல்லாத குறித்த வளாகங்கள் தினமும் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுவதாகவும் அவர் கூறினார்.

எனவே அனைத்து பொழுதுபோக்கு மையங்களை நடத்துபவர்களையும் எப்போதும் நிர்ணயிக்கப்பட்ட விதிகளுக்கு இணங்குமாறு போலீஸ் அறிவுறுத்துவதாகவும், தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here