கானுன் சூறாவளி அச்சம் : தென் கொரியாவில் உள்ள மலேசிய சாரணர் குழு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்

புத்ராஜெயா, அகஸ்ட்டு 9:

தென் கொரியாவின் சேமன்ஜியத்தில் நடைபெறும் 25வது உலக சாரணர் விழாவில் கலந்து கொண்ட மலேசிய சாரணர் குழுவைச் சேர்ந்த மொத்தம் 474 உறுப்பினர்கள், தற்போது வெப்ப அலை அச்சுறுத்தல் மற்றும் கானுன் சூறாவளி அச்சம் காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மலேசிய வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, அவர்கள் கொரியா தேசிய வேளாண்மை மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகம் மற்றும் ஜியோன்ஜு-சி, ஜியோலாபுக்-டோவில் உள்ள ஜியோன்புக் தேசிய பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

இது தொடர்பில் சியோலில் உள்ள மலேசியத் தூதரகம், அங்குள்ள மலேசியக் குழுவின் அமைப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டு முன்னேற்றங்களைத் தெரிந்துகொண்டு வருகிறது.

மேலும் குறித்த சாரணர் விழாவின் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தங்குமிடம், போக்குவரத்து, மருத்துவ பராமரிப்பு மற்றும் சமையல் சேவைகளை வழங்குவதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்கும் என்று, தென் கொரிய வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 7) அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

கானுன் சூறாவளி நாளை (10 ஆகஸ்ட்) தென் கொரியாவைத் தாக்கக்கூடும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளவேளை, இந்த சூறாவளியினால் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், அது, ஒரு ரயிலைத் தடம் புரளச் செய்யும் அளவுக்கு வலுப்பெற்றதாக இருக்கும் என்று அதிகாரிகள் கூறினர்.

இந்த உலக சாரணர் விழாவில் கலந்துகொள்ள 158 நாடுகளைச் சேர்ந்த சுமார் 43,000 இளம் சாரணர்கள் ஆகஸ்ட் 1 முதல் 12, 2023 வரை நாட்டின் தென்மேற்கில் உள்ள கடலோரப் பகுதியில் இயங்கிவந்த முகாம் தளத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here