மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த தந்தை – 18 வாரக் கர்ப்பத்தால் வெளிச்சத்திற்கு வந்த கொடூரம்!

கோலாலம்பூர்:

சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தை 47 வயது தந்தை இன்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். பாதிக்கப்பட்ட 20 வயது இளம் பெண் தற்போது 18 வாரக் கர்ப்பமாக இருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

நான்கு குழந்தைகளுக்குத் தந்தையான அந்த 47 வயது கூலித் தொழிலாளி, இன்று பத்து பஹாட் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது தன் மீதான இரண்டு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை, தனது வீட்டில் வைத்து மகளைப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து, குடும்பத்தினர் அவரைச் சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அந்தப் பெண், தனது தந்தை தன்னை மிரட்டிப் பணிய வைத்ததாகவும், உண்மையைச் சொல்லக் கூடாது என அச்சுறுத்தியதாகவும் கண்ணீருடன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த வழக்கு தண்டனைச் சட்டம் பிரிவு 376(3)-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் இக்குற்றத்திற்காக அவருக்கு 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் குறைந்தது 10 பிரம்படிகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த வழக்கு செஷன்ஸ் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால், தண்டனை மற்றும் வழக்கின் முழு விவரங்களைச் சமர்ப்பிக்க நாளை (ஏப்ரல் 30) வரை மஜிஸ்திரேட் அருண் நோவல் தாஸ் காலக்கெடு விதித்துள்ளார். குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.

தந்தை என்ற பெயரில் மகளுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதி அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here