மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவால் 8 மாதக் குழந்தை பலி – பெண் பராமரிப்பாளர் கைது!

கோலாலம்பூர்:

பெர்லிஸ் மாநிலத்தில் 8 மாத பெண் குழந்தை மூளையில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக உயிரிழந்த சம்பவத்தில், 35 வயதுடைய பெண் பராமரிப்பாளர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதத்தின் மத்தியில், இக்குழந்தை தலையில் ஏற்பட்ட கடுமையான உள்காயங்களுடன் அலோர் ஸ்டார், சுல்தானா பாஹியா மருத்துவமனையின் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் (NICU) அனுமதிக்கப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

ஏப்ரல் 23 அன்று நடத்தப்பட்ட சவப்பரிசோதனையில், குழந்தையின் தலையில் ஏற்பட்ட பலமான தாக்குதலால் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு, அதுவே மரணத்திற்கு முக்கியக் காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டது என்று, ஆராவ் மாவட்ட போலீஸ் தலைவர் அகமட் மொக்சின் ரோடி கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக 35 வயதுடைய பெண் பராமரிப்பாளர் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, சந்தேக நபர் தற்போது போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் மீண்டும் வரும் ஜூன் 16-ஆம் தேதி போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

குழந்தையின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here