ராமேஸ்வரி ராஜா
ஈப்போ, செப். 12 :
நேற்று நடைப்பெற்ற அனைத்துலக புத்தாக்கப் போட்டியில் (World Youth Stem Invention and Innovation) ஈப்போ மகிழம்பூ தமிழ்ப்பள்ளியின் நான்காம் ஆண்டு மாணவி கபிநயா பார்த்திபன் தங்கப் பதக்கம் வென்று பள்ளிக்கும் குடும்பத்தினருக்கும் பெருமைச் சேர்த்துள்ளார். மலேசியா, வியட்னாம், ரோமனியா,இந்தோனிசியா,கசகஸ்தான்,பிலிப்பைன்ஸ் மற்றும் நேப்பால் போன்ற ஏழு நாடுகளிலிருந்து மாணவர்கள் இப்போட்டியில் கலந்துக் கொண்டனர். அதில் கபிநயாவிற்கு தங்கம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மகிழம்பூ தமிழ்ப்பள்ளியில் பூத்த மலரான கபிநயா பார்த்திபன், புத்தாக்க சிந்தனை மிக்கவர் என்பதுடன் சிறுவயது முதல் தன் முயற்சியால் பல புத்தாக்க போட்டியில் பங்கெடுத்துள்ளார் என பள்ளியின் தலைமையாசிரியர் எம். கோகிலவாணி தெரிவித்தார்.

நமது பள்ளியும், மாணவர்களும் உலக அளவில் தொடர்ந்து வெற்றிச்சாதனைகளை பதித்து வருகின்றனர் என்பதில் பெருமையடைகிறோம். தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனைச் சிகரங்களாய் இருக்கின்றார்கள் என்பதற்கு எங்கள் பள்ளியின் மாணவர்களும் ஒரு சான்று எனவும் பெருமிதத்துடன் அவர் கூறினார்.

பார்த்திபன் மலர்விழி தம்பதியரின் புதல்வியான கபிநயா, தனக்கு புத்தாக்கத்திலும் மறுசுலர்ச்சி சிந்தனையிலும் ஆர்வம் அதிகம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்தார். ஆசிரியர் பணி புரியும் தன் அம்மா மலர்விழி, தனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் பல புத்தாக்க போட்டிகளில் பங்கெடுத்து பரிசுகளையும் குவித்துள்ளார். அதுவே தனக்கு ஒரு தூண்டுக்கோள் என்று பெருமையுடன் கூறினார்.

தன் வெற்றிக்கு பள்ளி தலைமையாசிரியை எம்.கோகிலவாணி அவர்கள், துணைத்தலைமையாசிரிகள், வகுப்பாசிரியை நாகஜொதி அவர்கள், பெற்றோர் மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசியர் சங்க குழுவினர் பெரிதும் பங்காற்றினர் என்றும் காவியா மேலும் கூறினார்.









