ஜோகூர் பாரு:
புலம்பெயர்ந்தோர் திருப்பி அனுப்பும் திட்டத்தில் ஜோகூரில் இதுவரை பதிவு செய்த 38 ஆவணமற்ற வெளிநாட்டவர்களில் 11 குழந்தைகளும் உள்ளதாக மாநில குடிநுழைவு இயக்குநர் பஹாருடின் தாஹிர் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கிய இந்தத் திட்டத்தில் பதிவான இந்த எண்ணிக்கை, அதாவது “ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி நிலவரப்படி, 7 ஆண்கள், 20 பெண்கள் மற்றும் 12 வயதுக்குக் குறைவான 11 பிள்ளைகள் – 6 சிறுமிகள் மற்றும் 5 சிறுவர்கள் அடங்கிய 38 ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் பதிவு செய்துள்ளனர், ”என்று அவர் நேற்று கூறினார்.
ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் இந்தோனேசியர்கள் என்றும் மற்றவர் இந்தியப் பெண் என்றும் பஹாருதீன் கூறினார்.

“திட்டத்தில் பதிவு செய்தவர்கள் ஏற்கனவே தங்கள் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டு, தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்புவதற்கான விமான டிக்கெட்டுகளைப் பெற்றுள்ளனர்.
“நாங்கள் அவர்களுக்கு 14 நாட்களுக்கு ஒரு சிறப்பு அனுமதி விசாவை வழங்கியுள்ளோம். அவர்கள் தரப்பில், குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்பிச் செல்வதை உறுதி செய்ய வேண்டும்,” என்றார்.
ஜோகூரிலுள்ள ஏனைய சட்டவிரோத குடியேற்றவாசிகள் இங்குள்ள ஜாலான் ஆயி ர் மோலெக் வழியாக விஸ்மா பெர்செகுடுவானில் உள்ள மாநில குடிநுழைவுத் துறை அலுவலகத்திற்குச் சென்று, சொந்த நாட்டிற்குச் செல்ல இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யுமாறு அவர் வலியுறுத்தினார்.
“வெள்ளி மற்றும் சனி வார இறுதி நாட்கள் என்பதால் ஞாயிறு முதல் வியாழன் வரை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை எங்களது கவுன்டர்கள் திறந்திருக்கும்.
“ஆனால் தேவைப்பட்டால் நாங்கள் கவுண்டர்களின் இயக்க நேரத்தை நீட்டிப்போம்,” என்று அவர் கூறினார்.
முன்னதாக, ஆவணமற்ற வெளிநாட்டவர்கள் வழக்குத் தொடரப்படாமல் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கும் திட்டம் மார்ச் 1 ஆம் தேதி தொடங்கும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





















