காஜாங்:
காஜாங், பிளாசா மெட்ரோவில் உள்ள தங்க நகைக்கடையில் முகமூடி அணிந்த நான்கு கொள்ளையர்கள் நேற்று கொள்ளையடித்துவிட்டு, கடையில் இருந்து நகைகளுடன் தப்பியோடியுள்ளனர்.
நேற்று பிற்பகல் 3.30 மணியளவில், குறித்த சம்பவம் தொடர்பில் MERS 999 க்கு அவசர அழைப்பு மூலம் தகவல் கிடைத்தது என்று காஜாங் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் முகமட் நசீர் ரஹ்மான் கூறினார்.
மதியம் 3.17 மணியளவில் சந்தேகநபர்கள் நால்வரும் பாதுகாவலர்களைப் போல உடை மற்றும் முகமூடி அணிந்து, கையுறைகளை அணிந்து கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள தங்க நகைக்கடைக்குள் நுழைந்தனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்த கண்ணாடிப் பெட்டிகளை இரும்பு சுத்தியலால் உடைத்து நகைகளை எடுத்துச் சென்றனர்.
சம்பவத்தின் போது, சந்தேக நபர்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
மேலும் அவர்கள் இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஒரு துப்பாக்கியை எடுத்துச் சென்றதாக நம்பப்படுவதுடன், அவர்கள் கடையின் சுவரில் ஒரு துப்பாக்கிச் சூடு நடத்தியபின், கட்டிடத்தின் பார்க்கிங் பகுதி வழியாக தப்பித்துச் சென்றனர் என்று அவர் சொன்னார்.
இந்த வழக்கில் மொத்த இழப்பு இன்னும் விசாரணையில் உள்ளது ” என்று முகமட் நசீர் கூறினார்.
கட்டிடத்தின் சிசிடிவி காட்சிகளை போலீசார் இன்னமும் விசாரித்து வருகின்றனர் என்றும் விசாரணைக்கு உதவ பல சாட்சிகளிடம் வாக்குமூலம் பெற்றும் வருகின்றனர் என்றும் அவர் சொன்னார்.
துப்பாக்கிச் சட்டம் 1971 (அதிகரித்த தண்டனைகள்) பிரிவு 3ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால், காயம் அல்லது மரணம் இல்லாவிட்டாலும் கூட, மரண தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.





















