அசாம் வெள்ளம்: 19 மாவட்டங்களில் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

கவ்ஹாத்தி:

பிரம்மபுத்திரா, அதன் கிளை ஆறுகள் என எட்டு ஆறுகளில் வெள்ள நீர் அபாய அளவைத் தாண்டி பாய்வதால் அசாம் மாநிலத்தின் 19 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால், ஆறு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தவித்துவருவதாக அசாம் அரசு தெரிவித்துள்ளது.

மாநிலத்தின் வெள்ள நிலவரம் மிகவும் மோசமடைந்து இருப்பதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா வேதனை தெரிவித்துள்ளார்.

இருப்பினும் மத்திய அரசு உதவியுடன் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

காம்ரூப், கோலாகட், மஞ்ஜுலி, லக்கிம்பூர், கரீம்கஞ்ச், சச்சார், தேமாஜி, மொரிகான், உதால்குரி, திப்ருகர், தீன்சுகியா, நாகாவோன், சிவ்சகர், தரங், நல்பாரி, சோனித்பூர், தமுல்பூர், பிஸ்வநாத், ஜோர்ஹத் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் லக்கிம்பூர் மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மாநிலத்தில் பாயும் பிரம்மபுத்திரா நதி தற்போது நேமாதிகாட், தேஜ்பூர் ஆகிய இடங்களில் அபாய அளவைத் தாண்டி பாய்வதால் பல்வேறு இடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாக அவர் தெரிவித்தார்.

இந்தச் சூழலில், அடுத்த சில நாள்களுக்கு அசாம் மாநிலத்தில் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“எங்கு பார்த்தாலும் வெள்ளம்தான். எங்கள் வீடுகள் மட்டுமன்றி சாலைகளும் நீரில் மூழ்கியுள்ளன. இந்தப் பகுதியில் நிறைய கிராமங்களும் வீடுகளும் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பிரச்சினை தொடர்கதையாக உள்ளது,” என அசாமின் மோரிகான் பகுதி மக்கள் கூறுகின்றனர்.

“பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடையும் வகையில் மக்கள் தங்களது உடைமைகளுடன் வெள்ள நீரை படகில் கடந்து வருகின்றனர்.

பிரம்மபுத்திரா, பராக் பகுதி உட்பட சுமார் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 2,70,628 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா என்னைத் தொடர்புகொண்டனர். சூழலை சமாளிக்கத் தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தனர். தேசிய பேரிடர் மீட்பு படையினரும் ராணுவத்தினரும் தயார் நிலையில் உள்ளனர்,” என முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, “அசாமில் திப்ருகாருக்கு வடக்கே வெள்ளம் சூழ்ந்த பிரம்மபுத்திராவில் உள்ள ஒரு சிறிய தீவில் இருந்து மாயமான 13 மீனவர்களை இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) மீட்டுள்ளது. மீட்புக்குப் பிறகு இந்திய விமானப்படையால் அவசர முதலுதவி அளிக்கப்பட்டது,” என்று இந்திய விமானப்படை எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளது.

அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் வெள்ளம் அபாயகரமானதாக மாறியுள்ளது, வெள்ள நீர் 95 வன முகாம்களை மூழ்கடித்தது. பூங்காவில் மொத்தம் 233 முகாம்கள் உள்ளன. வெள்ளம் காரணமாக அதிகாரிகள் ஆறு முகாம்களை காலி செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here