மன்னிப்பு கேட்க வேண்டும்: ராகுலுக்கு பா.ஜ., தலைவர் நோட்டீஸ்

மும்பை:

மஹாராஷ்டிராவில் ஓட்டுக்கு பணம் கொடுத்த புகார் தொடர்பான விவகாரம் தொடர்பாக தன் மீது தவறாக குற்றம்சாட்டியதற்காக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது வழக்கை சந்திக்க வேண்டும் என பா.ஜ., பொதுச்செயலர் வினோத் தாவ்டே வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

கடந்த 19 ம் தேதி மஹாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களுக்கு பா.ஜ.,வின் தேசிய பொதுச் செயலர் வினோத்தாவ்டே பண விநியோகம் செய்தார் என பகுஜன் விகாஸ் அகாதி குற்றம்சாட்டியது. இது தொடர்பாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இது குறித்த வீடியோவை காங்கிரஸ் வெளியிட்டது. அதில் நட்சத்திர விடுதியில் வினோத் தாவ்டேவை ஏராளமான பகுஜன் விகாஸ் அகாதி ஆதரவாளர்கள் சூழ்ந்து கொண்டுள்ளனர். அவர் முன்பு தொண்டர்கள் பணத்தை அசைத்துக் காட்டும் காட்சிகள் வெளியாகி இருந்தன.

இதனை வைத்து ராகுலும் பிரதமர் மோடியை விமர்சித்து இருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் ராகுல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாதே ஆகியோருக்கு வினோத் தாவ்டே வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அந்த நோட்டீசில், ” என் மீதான குற்றச்சாட்டு பொய். ஆதாரமற்றது. தவறான நோக்கத்துடன் சுமத்தப்பட்டது. பணம் கொடுத்த விவகாரத்தில் என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ்தலைவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். அல்லது கிரிமினல் நடவடிக்கையை தொடர நேரிடும் ” எனக்கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here