சிங்கப்பூர் – ஜோகூர் RTS ரயில் திட்டப் பணிகள் 90% நிறைவு: 6 நிமிடங்களில் எல்லையைக் கடக்கலாம்!

கோலாலம்பூர்:

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் ஜோகூர் பாரு இடையே அமைக்கப்பட்டு வரும் விரைவு ரயில் சேவை (RTS Link) திட்டத்தின் கட்டுமானப் பணிகள், கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி நிலவரப்படி 90 விழுக்காடு நிறைவடைந்துள்ளதாக மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இந்த ரயில் சேவை பயன்பாட்டிற்கு வரும்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பயண நேரம் வெறும் 6 நிமிடங்களாகக் குறையும். 4 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த ரயில் பாதையில், ஒரு மணி நேரத்திற்கு இரு திசைகளிலும் தலா 10,000 பயணிகள் வரை பயணிக்க முடியும். இது காஸ்வே (Causeway) பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை பெருமளவு குறைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இத்திட்டத்திற்காக எல்லைக் கட்டுப்பாட்டு முகமை, சுங்கத்துறை மற்றும் காவல்துறை என மொத்தம் 794 அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 478 புதிய அதிகாரிகளுக்கு ஜூன் 22 முதல் செப்டம்பர் 27 வரை செகாமட் காவல்துறை பயிற்சி மையத்தில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். இவர்கள் அக்டோபர் 1 முதல் புக்கிட் சாகர் சுங்க வளாகத்தில் பணியில் இணைவார்கள்.

பயணிகளின் சோதனைகளை விரைவுபடுத்த நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்படுகின்றன. மேலும் 18 அதிநவீன ஸ்கேனிங் இயந்திரங்கள் மற்றும் 22 உடல் பரிசோதனை இயந்திரங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

மலேசியாவும் சிங்கப்பூரும் ஒரே இடத்தில் குடிநுழைவுச் சோதனைகளை மேற்கொள்ளப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. அதாவது, பயணிகள் புறப்படும் இடத்திலேயே இரு நாட்டுச் சோதனைகளையும் முடித்துக்கொள்ளலாம்.

* MyNIISe அமைப்பு: பழைய குடிவரவு முறைகளுக்கு மாற்றாக, தேசிய ஒருங்கிணைந்த குடிநுழைவு அமைப்பு (MyNIISe) என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது பயணிகளுக்குத் தடையற்ற மற்றும் வேகமான பயண அனுபவத்தை வழங்கும்.

இந்த ரயில் சேவை வெற்றிகரமாகச் செயல்படும் பட்சத்தில், அது ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதாரத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்க்கும் என்றும், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் உறவை வலுப்படுத்தும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

புக்கிட் சாகர் பகுதியில் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்ட அமைச்சர், திட்டப்பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருவதை உறுதிப்படுத்தினார். விரைவில் இப்பயணம் சாத்தியமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here