கூலாய்:
ஜோகூரில் செடனாக்கிற்கு அருகில் உள்ள வடக்கு – தெற்கு விரைவுச்சாலையில் நடந்த ஓர் மோட்டார்சைக்கிள் விபத்தில் சிங்கப்பூர் பெண்மணி ஒருவர் உயிரிழந்தார்.
அதேநேரம் அவரது காதலன் மிக மோசமாகக் காயமுற்றார்.
இந்த விபத்து குறித்து செவ்வாய்க்கிழமை (டிசம்பர்) 10ஆம் தேதி காலை 9.15 மணிவாக்கில் காவல்துறைக்குத் தகவல் கிடைத்ததாக கூலாய் மாவட்ட காவல்துறை தலைவர் உதவி ஆணையர் டான் செங் லீ கூறினார்.
“சிங்கப்பூரைச் சேர்ந்த 23 வயது ஆடவர் அவரது 21 வயது காதலியுடன் அதிவேகத்தில் செல்லக்கூடிய ஒரு மோட்டார்சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருந்தார் என்றும், அவர்கள் கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூர் திரும்பிக்கொண்டிருந்தனர்,” என்றும் அவர் சொன்னார்.
“அந்த ஆடவர் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதினார்,” என்று உதவி ஆணையர் டான் கூறினார்.
மோட்டார்சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த அவரது காதலிக்குத் தலையில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன என்றும், அந்தப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்றும் அவர் கூறினார்.
இருவரும் தெமங்கொங் ஸ்ரீ மஹாராஜா துன் இப்ராஹிம் கூலாய் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.





















