ஜசெக மூத்த தலைவர் எம்.குலசேகரன் அடுத்த மாதம் நடைபெறும் கட்சியின் மத்திய செயற்குழுத் தேர்தலில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். இளம் தலைவர்களுக்கு வழி வகுக்கும் வகையில் போட்டியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தேசிய துணைத் தலைவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். இருப்பினும் கைதுகள், துன்புறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களைத் தாங்கிக் கொண்ட தங்கள் தலைவர்கள் சிலர் செய்த தியாகங்களை மறந்துவிடக் கூடாது என்று அவர் உறுப்பினர்களை வலியுறுத்தினார்.
கட்சி மூத்த தலைவர்கள் சிலர் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவும், தேர்தல்களில் உதவவும் தங்கள் சொந்தப் பணத்தைச் செலவிட வேண்டிய காலங்களை அவர் நினைவு கூர்ந்தார். இந்த அர்ப்பணிப்புள்ள உறுப்பினர்கள் இன்றும் நம்முடன் இருக்கிறார்கள். அவர்களின் பங்களிப்புகளை நாம் தொடர்ந்து மதிக்க வேண்டும். அவர்கள் மறக்கப்பட மாட்டார்கள் என்று நம்புகிறேன் என்று சட்டம், நிறுவன சீர்திருத்த துணை அமைச்சர் குலசேகரன் கூறினார்.
தேர்தலில் கடுமையான சவாலை எதிர்கொள்ளும் ஜசெக தலைவர் லிம் குவான் எங்க்கு தனது ஆதரவை அளிப்பதாகத் தெரிகிறது. தேசிய ஆலோசகர் டான் கோக் வாய், தேசிய பொருளாளர் ஃபாங் குய் லுன், கட்சியின் மூத்த தலைவர் பீ பூன் போ ஆகியோர் கட்சித் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்த மூன்று நாட்களுக்குப் பிறகு குலசேகரனின் முடிவு வந்துள்ளது.
புதிய தலைமுறை தலைவர்களுக்கு இடமளிக்க விரும்புவதாக அவர்களும் கூறியிருந்தனர். 30 ஆண்டுகளாக ஜசெகவில் இருக்கும் குலசேகரன், சாதாரண, தொழிலாள வர்க்க மலேசியர்களின் உரிமைகளையும் ஒட்டுமொத்த மனித உரிமைகளையும் தொடர்ந்து பாதுகாக்குமாறு கட்சியை வலியுறுத்தினார். கட்சி எப்போதும் அதன் சோசலிச அடித்தளத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும், சமத்துவம், நீதி, மனித உரிமைகள் மற்றும் நல்லாட்சிக்காகப் போராட வேண்டும் என்று அவர் கூறினார்.









