க. கலை –போர்ட்டிக்சன்,
நெகிரி செம்பிலான் மாநிலம் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியின் கீழ் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைப் பெற்றுள்ளது. அதேவேளையில், மாநில மக்களின் நலனில் அக்கறை செலுத்தி, அவர்கள் சுபிட்சமாக வாழ்வதற்கான பல்வேறு திட்டங்களையும் மாநில அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
கடந்த எட்டு ஆண்டுகளாக பக்காத்தான் ஹராப்பான் அரசு முன்னெடுத்த மக்கள் நலத் திட்டங்கள் தடையின்றி தொடர வேண்டுமெனில், மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்படும் தற்போதைய மாநில அரசு மீண்டும் அமைய வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பானின் லிங்கி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் டத்தோ ஸ்ரீ அமீனுடின் ஹரூன் வலியுறுத்தினார்.
லிங்கி சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்ட அவர், மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து வீடு தோறும் சென்று வாக்கு சேகரித்தார்.
கடந்த எட்டு ஆண்டுகால பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில், அனைத்து இன மக்களுக்கும் சமமாக சேவைகள் வழங்கப்பட்டதாக அவர் கூறினார். தமிழ்ப்பள்ளிகள், சீனப் பள்ளிகள், பள்ளிவாசல்கள், இந்து ஆலயங்கள், சீன ஆலயங்கள், சீக்கிய குருத்வாராக்கள், தேவாலயங்கள் ஆகியவற்றின் மேம்பாட்டிற்கும், ஏழை மக்களுக்கான நிதி உதவிகள், சிறு வியாபாரிகளுக்கான ஊக்கத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், கடந்த காலங்களில் சுமார் மூன்று ஆண்டுகள் நாட்டில் நிலவிய அரசியல் நிலையற்ற சூழ்நிலை காரணமாக பல மக்கள் நலத் திட்டங்கள் பாதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்தாலும், அரசியல் நிலைத்தன்மை நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது என்றார்.
மத்திய அரசுடன் ஒரே திசையில் செயல்படும் பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான மாநில அரசு மீண்டும் அமைந்தால்தான் வளர்ச்சித் திட்டங்களை விரைவாகவும் திறம்படவும் செயல்படுத்த முடியும். அதற்காக மாநில மக்கள் பக்காத்தான் ஹராப்பானுக்கு வலுவான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மக்களின் நல்வாழ்வையும் மாநிலத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியையும் உறுதிப்படுத்த, நெகிரி செம்பிலானில் பக்காத்தான் ஹராப்பான் அரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்த பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்று டத்தோ ஸ்ரீ அமீனுடின் ஹரூன், மக்கள் ஓசைக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் தெரிவித்தார்.



















