கோலாலம்பூர்,
சிறைச்சாலையில் இருக்கும்போது ஆய்வுகளை மேற்கொண்டு அதற்குரிய படைப்பைப் படைத்த எம்.ஒய். என்ற சிறைவாசி OUM எனப்படும் மலேசிய பொதுப்பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பட்டமளிப்பு விழாவில் வணிக நிர்வாகத்தில் பிஎச்டி எனப்படும் முனைவர் பட்டம் பெற்றார்.

சிறைவாசி ஒருவர் முழுமையாக சிறையில் இருந்தவாறு படித்து ஆய்வுகளை மேற்கொண்டு பிஎச்டி பட்டம் பெற்ற முதல் நபராக இவர் திகழ்கிறார். கோலாலம்பூர், உலக மாநாட்டு மையத்தில் கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழாவில் இணை வேந்தர் டான்ஸ்ரீ அஸ்மான் ஹஷிமிடருந்து பிஎச்டி பட்டம் பெற்றார்.

38 வயதான இவர், 2001ஆம் ஆண்டு காஜாங் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 14. மாநில சுல்தான் கருணையில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அச்சமயத்தில் அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. இருப்பினும் சிறைச்சாலையில் இருந்தவாறு எஸ்பிஎம், எஸ்டிபிஎம் தேர்வுகளை எழுதி சிறந்த புள்ளிகளைப் பெற்றார்.

2009ஆம் ஆண்டு SUM பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புக்கு பதிவு செய்தார். கடந்த 16 ஆண்டுகளில் வணிக நிர்வாகத்துறையில் இளங்கலைப் பட்டம் முதுகலைப் பட்டம் பெற்ற நிலையில் இறுதியாக பிஎச்டி எனும் முனைவர் பட்டத்தையும் பெற்றார். சிறைச்சாலையில் இருந்தவாறே இத்தனையையும் அவர் செய்து முடித்தார். இந்நிலையில் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானின் அரச மன்னிப்பை அவர் பெற்றார். 2001இல் சிறையில் அடைக்கப்பட்ட எம்.ஒய். 2024இல் விடுதலையானார்.
அதேசமயம் அடுத்தமாதம் 180ஆவது வயதை எட்டவிருக்கும் தாங் துங் கிங் தொடர்புத்துறையில் இளங்கலைப் பட்டம் பெற்று வாழ்நாள் கற்றல் விருதையும் பெற்றார். இவர் சிபுவைச் சேர்ந்தவர். பேராக்கைச் சேர்ந்த 73 வயது யூசோப் ஹருன் இஸ்லாமிய ஆய்வியல் கல்வித்துறையில் பட்டம்பெற்றார். இவரும் வாழ்நாள் கற்றல் விருதைப் பெற்றார். இவ்விருவரும் கல்விக்கு வயதில்லை என்பதை நிரூபித்திருக்கின்றனர். இதனிடையே, காஜாங் சிறைச்சாலை வாசிகளான 3 இந்தியர்கள் OUM பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றனர்.

படத்தில் நீலநிற காலர் அங்கியை அணிந்திருப்பவர் வர்த்தக நிர்வாகத்துறையில் இளங்கலை ஹானர்ஸ் பட்டம்பெற்றார். கத்திரிப்பூ நிற காலர் அங்கி அணிந்திருக்கும் மற்ற இருவர் நிர்வாகத்துறையில் டிப்ளோமா பெற்றனர்.
இதுவரை 87 கண்டுபிடிப்புகளைப் பெற்று மலேசியா, கனடா, ஈரான், இந்தியா. தென்கொரியா, ஸ்ரீலங்கா, ஹாங்காங் ஆகிய நாடுகளிலிருந்து 200க்கும் அதிகமான விருதுகளைப் பெற்றிருக்கும் ஜோகூர், கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியை கோமதி சங்கரன் கல்வித்துறையில் முனைவர் பட்டம் பெற்றார். இவரின் சாதனையும் குறிப்பிடத்தக்க ஒரு வரலாறாக பதிவாகி இருக்கிறது.
OUM பல்கலைக்கழகத்தின் 29ஆவது பட்டமளிப்பு விழா கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் 2025 மே 3 முதல் 7 வரை 10 கட்டங்களாக நடைபெற்றது. இதில் மொத்தம் 7,915 பேர் பல்வேறு துறைகளில் பட்டம் பெற்றனர். கிளானா ஜெயாவில் செயல்படும் இப்பல்கலைக்கழகம் 2000 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 61 பாடத்திட்டங்களை ஆன்லைன் வழி வழங்குகிறது. இந்தப் பாடங்கள் மலேசிய தரச்சான்றிதழ் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றன. இதுவரை டிப்ளோமா முதல் டாக்டர் வரை 1 லட்சத்து 20 ஆயிரம் பட்டதாரிகளை இப்பல்கலைக்கழகம் உருவாக்கி இருக்கிறது.









