கோலாலம்பூர்:
பினாங்கு தீவு மாநகராட்சி (MBPP) அறிமுகப்படுத்திய தானியங்கி எண் பலகை கண்டறியும் (ANPR) அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாக, வழங்கப்பட்ட 29,240 அபராதங்கள் (Compounds) ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், இதனால் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு RM266,1ங் 60 கட்டணத் தொகை திரும்ப வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்ஜ் டவுன் கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பினாங்கு மாநில உள்ளாட்சி ஆணையர் ஜேசன் ஹுங் மூய் லாய் இத்தகவலைத் தெரிவித்தார்.
ரோந்து வாகனங்களில் உள்ள ANPR கேமராக்கள், பயணிகள் இறங்குவதற்காகவோ அல்லது ஏற்றுவதற்காகவோ சில வினாடிகள் நிறுத்தப்படும் வாகனங்களையும் “அனுமதிக்கப்படாத இடத்தில் நிறுத்தப்பட்ட வாகனம்” எனக் தவறாகக் கணித்து அபராதம் விதித்தன. வாகனத்தினுள் ஆட்கள் இருக்கிறார்களா என்பதை இந்த தொழில்நுட்பத்தால் துல்லியமாகக் கண்டறிய முடியாது என்பதால், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அபராதம் செலுத்தியவர்கள் செப்டம்பர் 30-க்குள் விண்ணப்பித்து நிதியைப் பெறலாம். இதற்கான அபராதக் ரசீது மற்றும் வங்கி கணக்கு விவரங்களை கொம்தார் 3-ஆம் தளத்தில் உள்ள மையத்திலோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் வழியிலோ சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் ‘Penang Smart Parking’ (PSP) செயலி வழியாகச் செலுத்தியவர்களுக்கு, பணமானது அவர்களின் ‘PSP Wallet’ கணக்கில் தானாகவே வரவு வைக்கப்படும்.
தொடர் எண்ணில் “PSPN” எனக் குறிப்பிட்டுள்ள சம்மன்கள் மட்டுமே இந்த ANPR ரத்து நடவடிக்கைக்குப் பொருந்தும். இனிவரும் காலங்களில், தவறான இடங்களில் வாகனங்களை நிறுத்துபவர்கள் மீதான நடவடிக்கைகள் ரோந்து அதிகாரிகளால் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டு, மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.























