இந்தியர்களுக்கு வாழ்நாள் கோல்டன் விசாவா? ஐக்கிய அரபு அமீரகம் மறுப்பு

அபுதாபி,வெளிநாடுகளில் உள்ள சில விசா ஏஜென்சிகள் இந்தியா, வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் அமீரகத்தில் தொழில் அல்லது சொத்துக்களில் முதலீடு இல்லாமல் வாழ்நாள் கோல்டன் விசா பெறலாம் என போலியாக விளம்பரம் செய்தன. இதில் 1 லட்சம் திர்ஹாம் ஒருமுறை செலுத்தினால் போதும் என கூறப்பட்டு இருந்தது. இதனை அடுத்து பலரும் இது உண்மையா? என அறிந்துகொள்ள அமீரக மத்திய அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்பு ஆணையத்தை சமூக ஊடக தளங்களில் தொடர்பு கொண்டு கேள்வி எழுப்பினர்.

இதற்கு அந்த ஆணையம் மறுப்பு தெரிவித்து தகவல் வெளியிட்டுள்ளது. அந்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இதுபோன்ற தகவல்கள் நாட்டுக்கு வெளியே தனியார் ஏஜென்சிகள் போலியாக வெளியிட்டுள்ளன. எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டினருக்கும் வாழ்நாள் கோல்டன் விசா என ஒன்று வழங்கப்படுவது இல்லை. எனவே இந்த தகவல்கள் அமீரக அரசுத்துறைகளின் ஒப்புதல் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எந்த ஒரு சட்ட வரையறையும் கிடையாது.

அமீரக கோல்டன் விசாவுக்கு பாதுகாக்கப்பட்ட விண்ணப்ப முறை அதிகாரப்பூர்வமான டிஜிட்டல் தளங்களில் மட்டுமே உள்ளது. குறிப்பாக ஆணையத்தின் இணையத்தளம் மற்றும் செல்போன் செயலியில் அணுகலாம். இதுகுறித்து தகவல் அறிய 600522222 என்ற வாடிக்கையாளர் சேவை மைய எண்ணை தொடர்பு கொள்ளுமாறு வெளிநாட்டில் வசிப்பவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here