தமிழர்கள் வாழும் நாடுகளில் 152 திருவள்ளுவர் சிலைகள், திருக்குறள் போற்றும் விஜிபிக்கு மக்கள் ஓசை பாராட்டு

கோலாலம்பூர், ஜூலை 3-

உலகப் பொதுமறையாம் திருக்குறளின் பெருமைதனைத் தடம்பதிக்க உலகமெங்கும் திருவள்ளுவர் சிலைகளைத் தமது சொந்தச் செலவில் நிறுவி வருகின்ற ஒரேயொரு உலகத் தமிழர், தமிழகத்தின் மாபெரும் வர்த்தகச் சக்கரவர்த்தி – வி.ஜி.பி. குழுமத்தின் தலைவர் டாக்டர் செவாலியர் வி.ஜி. சந்தோசம்.

தமிழின் சிறப்பையும் மேன்மையையும் உணர்த்தும் பொருட்டு, திருக்குறளை அடையாளமாகக் கொண்டு, அதனைப் படைத்த திருவள்ளுவரை உலகம் முழுவதும் கொண்டு சென்றால் திருக்குறள் கருத்துகள் மக்கள் மத்தியில் நிலைபெறும் என்று எண்ணி, இலங்கை, கனடா, அமெரிக்கா, மலேசியா போன்ற பல்வேறு நாடுகளில் இதுவரை 152 இடங்களில் திருவள்ளுவர் சிலையை நிறுவியுள்ளார்.

அண்மையில் தலைநகர் வந்திருந்த வி.ஜி. சந்தோசம், ஈப்போவிலுள்ள சங்கீத சபா தமிழ்ப்பள்ளியிலும் சுங்கைபட்டாணி சரஸ்வதி தமிழ்ப்பள்ளியிலும் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் 151, 152ஆவது திருவள்ளுவர் சிலையை நிறுவி, அதிகாரப்பூர்வமாக திறந்தும் வைத்தார்.

வி.ஜி. சந்தோசம் உடன் தமிழக மறுமலர்ச்சி திமுக துணைப் பொதுச் செயலாளரும் மல்லைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவருமான மல்லை சி.ஏ. சத்தியாவும் கலந்துகொண்டு நிகழ்ச்சிகளுக்குப் பெருமை சேர்த்தார்.

வி.ஜி.சந்தோசத்தின் தமிழ்த் தொண்டுக்குத் தலைவணங்கும் வகையில் மக்கள் ஓசை சார்பில் அதன் இயக்குநர் டத்தோ கோபி வள்ளுவர் புகழ்பரப்பும் அந்த அருந்தொண்டரை  நேரில் சந்தித்து விருந்தோம்பல் வழங்கி உளமாற பாராட்டினார்.

வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் மகத்தான தமிழ்த் தொண்டு மென்மேலும் வியாபிக்க வேண்டும் என வாழ்த்திய டத்தோ கோபி, அனைத்துலக மஞ்சுரியா குங்ஃபூ தற்காப்புக் கலை இயக்கத்தின் தலைவருமான மல்லை சி.ஏ. சத்யாவையும் மனதாரப் பாராட்டினார்.

குங்ஃபூ தற்காப்புக் கலை வழி மலேசிய வீரர்களும் தமிழக வீரர்களுக்கும் இடையிலான பரஸ்பர உறவை மேலோங்கச் செய்திருக்கும் மல்லை சத்யாவின் சேவை தொடர அவர் வாழ்த்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here