உடற்கூறாய்வு நிபுணருக்கு அச்சுறுத்தல்: முன்னாள் தலைமையாசிரியர் மீது குற்றச்சாட்டு

கோத்தா கினபாலு,

ஜாரா கைரினா மகாதீரின் மரண விசாரணையில் சாட்சியமாக இருந்த உடற்கூறாய்வு நிபுணர் டாக்டர் ஜெஸ்ஸி ஹியுவுக்கு எதிராக, முகநூல் (Facebook) வழியாக அச்சுறுத்தும் பதிவுகளை வெளியிட்டதாக முன்னாள் தலைமையாசிரியர் ஒருவருக்கு இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

61 வயதான கமுல் கமாருடின் என்ற குற்றஞ்சாட்டப்பட்டவர், நீதிபதி மார்லினா இப்ராஹிம் முன்னிலையில் தமக்கெதிராக வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து, விசாரணையை கோரினார்.

குற்றப்பத்திரிகை படி, குற்றவாளி தெரிந்தே அச்சுறுத்தும் வகையில் பதிவிட்டதாகவும், அதை டாக்டர் ஹியு கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி மாலை 4.15 மணியளவில் வாசித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பதிவு, செப்டம்பர் 4 ஆம் தேதி இரவு 11.00 மணியளவில் ‘அமுங் கமாருடின்’ என்ற சுயவிவரத்திலிருந்து முகநூலில் பதிவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, கமுல் மீது 1998 ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233(1)(a) மற்றும் 233(2) பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது 5 லட்சம் வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

துணை அரசு வழக்கறிஞர் யூஜெனி மெரிடித், குற்றஞ்சாட்டப்பட்டவரை 20,000 வெள்ளி ஜாமீனில் இரு நபர் உத்தரவாதத்துடன் விடுதலை செய்யவும், வழக்கு நடைபெறும் வரை பாதிக்கப்பட்டவரை தொந்தரவு செய்யக் கூடாது எனவும் நீதிமன்றத்தில் பரிந்துரைத்தார்.

கமுல் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எல்ஹனன் ஜேம்ஸ், தனது வாடிக்கையாளர் போலீஸ் விசாரணையில் முழுமையாக ஒத்துழைத்தார் என்றும், அவர் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால் ஜாமீன் தொகையை குறைக்க வேண்டும் என்றும் கோரினார்.

பின்னர், நீதிபதி கமுலை இரு உள்ளூர் நபர் உத்தரவாதத்துடன் 20,000 வெள்ளி ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார். இந்த வழக்கு செப்டம்பர் 29 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here