சாரா ரஹ்மா உதவி பெற பதிவு தேவையில்லை: துணை அமைச்சர்

ஷா ஆலம்,

ஒருமுறை வழங்கப்படும் RM100 அடிப்படை ரஹ்மா உதவி தொகைக்கு (சாரா) எந்தவிதமான பதிவு செயல்முறையும் தேவையில்லை என்று துணைத் தொடர்பு அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்துள்ளார். தகுதியுள்ளவர்களுக்கு விண்ணப்பம் இன்றி அந்த உதவி தானாக வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

சாரா உதவி பெற பதிவு அவசியம் என்று சமூக ஊடகங்களில் பரவி வந்த தகவலுக்கு விளக்கம் அளித்த அவர், “நிதி அமைச்சகத்திடமிருந்து எங்களுக்குக் கிடைத்த தகவல்படி, RM100 உதவியைப் பெற பதிவு செய்ய தேவையில்லை. சமூக ஊடகங்களில் பரவிய செய்தி தவறானது,” என்றார்.

மேலும், சாரா பதிவு தொடர்பான போலி பதிவுகளின் எண்ணிக்கை குறித்து தனது அமைச்சகத்திடம் இதுவரை விரிவான அறிக்கை வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அதோடு, 2025 ஆம் ஆண்டில் 18 வயதை பூர்த்தி செய்யாதவர்களும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த ஜூலையில் அறிவித்தபடி, தங்கள் மைகார்டு (MyKad) மூலம் இந்த உதவியைப் பெறலாம் என அவர் கூறினார். “உதாரணமாக, ஒருவருக்கு தற்போது 17 வயது 10 மாதங்கள் இருந்தாலும், இன்னும் இரண்டு மாதங்களில் பிறந்தநாளைக் கொண்டாடவிருப்பதால் அவர்களும் இந்த உதவிக்குத் தகுதியானவர்களாக இருக்கிறார்கள்,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here