சபாவின் பாடாஸ் ஆற்றின் நீர்மட்டம் அபாயக் கட்டத்தைத் தாண்டியது – பியூஃபோர்ட்டில் 64 பேர் வெளியேற்றம்!

கோத்தா கினபாலு:

சபாவின் பியூஃபோர்ட் மாவட்டத்தில் உள்ள கம்போங் சுவாசாவில் (Kampung Suasa), தொடர் மழையினால் பாடாஸ் நதியின் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டியதை அடுத்து, 20 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேர் அவசரமாக வெளியேற்றப்பட்டு செலாகோன் (Selagon) நிரந்தர நிவாரண மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பாடாஸ் ஆற்றின் நீர்மட்டம் அதன் அபாய அளவான 8.7 மீட்டரைக் கடந்து, தற்போது 9.4 மீட்டர் என்ற ஆபத்தான நிலையில் நீடிக்கிறது.

ஜனவரி 1 முதல் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் மதிய வேளையில் ஏற்பட்ட கடல் மட்ட உயர்வு (High Tide) காரணமாக நீர்மட்டம் வேகமாக அதிகரித்துள்ளது.

நேற்று மாலை 4.10 மணியளவில் அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறை, போலீஸார் மற்றும் சிவில் தற்காப்புப் படையினர் (APM) இணைந்து பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

வெள்ள நீர் சூழ்ந்திருப்பதால், பின்வரும் முக்கியச் சாலைகள் அனைத்து ரக வாகனங்களும் செல்ல முடியாதபடி துண்டிக்கப்பட்டுள்ளன: அவற்றுள்,

ஜாலான் கம்போங் சுவாசா (Jalan Kampung Suasa)

ஜாலான் கம்போங் பக்காலாவ் (Jalan Kampung Bakalau)

ஜாலான் லாகோ (Jalan Lago)

ஜாலான் கௌண்டு (Jalan Koundu)

ஜாலான் கூக்குப் (Jalan Kukup)

ஜாலான் காங்சா (Jalan Kangsa)

ஜாலான் பாங்காலாலக் (Jalan Bangkalalak) ஆகிய சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன என்று, மீட்புப் பணித் தளபதி முகமட் நூர் ஹைகல் அப்துல்லா கூறினார்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் மேலும் பலரை வெளியேற்றத் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். தாழ்வான பகுதிகளிலும் ஆற்றங்கரையோரங்களிலும் வசிக்கும் மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும், அதிகாரிகளின் உத்தரவுகளைப் பின்பற்றி வெளியேறத் தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here