விஜயை விமர்சித்த விவகாரம்: அவதூறு பரப்புவதாக கமிஷனர் ஆபீஸில் ஜூலி புகார்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் குரல் கொடுத்து பிரபலமானவர் ஜூலி. அந்த போராட்டத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்ற அவர், பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். நர்ஸாக பணியாற்றியிருந்த ஜூலி, அதே நேரத்தில் சில குறும்படங்களிலும் நடித்திருந்தார்.

அண்மைக்காலமாக ஜூலியின் பெயர் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக விஜய் தலைமையிலான தவெக கட்சி தொடர்பான கருத்துகள் காரணமாக அவர் டிரெண்டாகி வருகிறார். சமீபத்தில் வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் கூறிய “குட்டிக்கதை” குறித்து விமர்சித்து ஜூலி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்

அந்த வீடியோவில், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் உண்மை நிலையை அறியாமல் சிலர் அரசியல் ஆதாயத்திற்காக பேசுகிறார்கள் என்று ஜூலி தெரிவித்திருந்தார். விஜயை விமர்சித்து வீடியோ வெளியிட்டதையடுத்து, அவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் ஜூலியை கடுமையாக விமர்சித்தனர்.

இந்த நிலையில், விஜய் பேசிய குட்டிக்கதை குறித்து கருத்து தெரிவித்ததற்காக தன்னைக் குறிவைத்து சிலர் திட்டமிட்டு அவதூறு பரப்புவதாக ஜூலி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் சென்னை காவல் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

அதில், கிட்னி விற்பனை மோசடியில் தன்னை தொடர்புபடுத்தி ஆதாரமற்ற பொய்யான வீடியோக்கள் வெளியிட்டு மன உளைச்சலை ஏற்படுத்துவதாக தவெக நிர்வாகி உட்பட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜூலி கோரிக்கை வைத்துள்ளார். மேலும், அவர்கள்மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here