இஸ்கண்டார் புத்திரி:
ஜோகூர், புக்கிட் இண்டா பகுதியில் உள்ள நான்கு வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகள் (Molotov Cocktail) வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்கள் சிங்கப்பூரைச் சேர்ந்த சட்டவிரோதக் கடன் வழங்கும் (Ah Long) கும்பலால் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக இஸ்கண்டார் புத்திரி மாவட்ட போலீஸ் தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாகப் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், கடன் வழங்குபவர் சட்டம் 1951, பிரிவு 5(2) மற்றும் தண்டனைச் சட்டத்தொகுப்பு, பிரிவு 435 (தீயினால் சேதம் விளைவித்தல்) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் நடந்த இடத்திற்கு இஸ்கண்டார் புத்திரி நாடாளுமன்ற உறுப்பினரும், பெர்லிங் சட்டமன்ற உறுப்பினருமான லியூ சின் தோங் நேரில் சென்று பார்வையிட்டார்.
பாதிக்கப்பட்ட வீடுகளைப் பார்வையிட்ட பின் அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்:”புகார் கிடைத்தவுடன் விரைந்து செயல்பட்ட புக்கிட் இண்டா போலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் ஜே.எம். ஆல்வின் சுதேஷனுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பகுதியில் பாதுகாப்பை மேம்படுத்த குடியிருப்பாளர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு முழு ஆதரவு வழங்கப்படும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நல உதவித் திட்டங்கள் வழங்கப்படும் என்றும், இச்சம்பவம் குறித்துத் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
சிங்கப்பூரை மையமாகக் கொண்டு இயங்கும் சட்டவிரோத வட்டி கும்பல்கள், எல்லையைத் தாண்டி மலேசியாவில் இத்தகைய வன்முறைகளில் ஈடுபடுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.




















