பகுதிநேர வேலை மோசடி: ஆன்லைன் விளம்பரத்தை நம்பி சிவில் பெண் ஊழியர் RM55,000 இழப்பு!

கோலாலம்பூர்:

இணையம் வழியாக வந்த பகுதிநேர வேலை வாய்ப்பு விளம்பரத்தை நம்பிய 33 வயது சிவில் ஊழியர் (அரசு ஊழியர்) ஒருவர், 55,334 ரிங்கிட்டை ஏமாந்துள்ளார்.

கடந்த மே 11 அன்று, பாதிக்கப்பட்ட பெண் இன்ஸ்டாகிராமில் (Instagram) கூடுதல் வருமானம் தருவதாகக் கூறப்பட்ட ஒரு விளம்பரத்தைக் கண்டு, அதில் இருந்த நபரைத் தொடர்பு கொண்டுள்ளார் என்று, கோலா திரெங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் அஸ்லி முகமட் நோர் கூறினார்.

நிர்வாக ஆலோசகர் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட பெண் சந்தேக நபர், கவர்ச்சிகரமான கமிஷன் தொகையுடன் கூடிய சில பகுதிநேர வேலைத் திட்டங்களை அந்தப் பெண்ணிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

சந்தேக நபர் அனுப்பிய லிங்க்குகள் (Links) மூலம் டிஜிட்டல் தளத்தில் தயாரிப்புகளைச் சரிபார்ப்பதே (Product Verification) அந்தப் பணி. முதற்கட்டமாக மூன்று பணிகளை முடித்த அந்தப் பெண்ணிற்கு, கமிஷன் தொகையாக RM1,176 சரியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பெண்ணிற்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

அதிக கமிஷன் பெற வேண்டும் என்றால் உறுப்பினர் நிலையை உயர்த்த வேண்டும் எனக்கூறி, பாதிக்கப்பட்ட பெண்ணை ‘டெலிகிராம்’ (Telegram) குழு ஒன்றில் சந்தேக நபர்கள் இணைத்துள்ளனர். கூடுதல் பணிகளுக்காக அந்தப் பெண் RM3,350 செலுத்தியுள்ளார். ஆனால், அவர் தயாரிப்பைச் சரிபார்த்ததில் தவறு செய்துவிட்டதாகக் கூறி கமிஷன் தொகை நிறுத்தப்பட்டது.

அந்தத் தவறைச் சரிசெய்து, குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் RM32,000 கமிஷனைப் பெற வேண்டும் என்றால், இப்பெண் மேலும் RM16,450 செலுத்த வேண்டும் என சந்தேக நபர்கள் வற்புறுத்தியுள்ளனர்.

அதே குழுவில் இருந்த மற்றொரு நபர், தான் ஒரு இல்லத்தரசி என்றும் தனது குழந்தைக்கு உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்றும் கூறி நாடகமாடியுள்ளார். தனது தவறால் மற்றவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற பயத்தில், பாதிக்கப்பட்ட பெண் அவர்கள் கேட்ட பணத்தைச் செலுத்தியுள்ளார்.

இதன் பின்னர், குழுவின் மொத்த கமிஷன் தொகை RM440,000 ஆக உயர்ந்துவிட்டதாகவும், அதனைத் திரும்பப் பெற உள்நாட்டு வருவாய் வாரியத்திற்கு (LHB) 8 சதவீத வரி செலுத்த வேண்டும் என்றும் சந்தேக நபர்கள் மீண்டும் ஆசை காட்டியுள்ளனர். இதனை நம்பி மே 12 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தனது சேமிப்பிலிருந்து மேலும் RM35,534 தொகையை இரண்டு வெவ்வேறு கணக்குகளுக்கு அந்தப் பெண் அனுப்பியுள்ளார்.

இறுதியில், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட டிஜிட்டல் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியாதபோதுதான், தான் ஏமாற்றப்பட்டதை அந்தப் பெண் உணர்ந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் நேற்று இரவு 8.12 மணியளவில் அளித்த புகாரின் பேரில், இச்சம்பவம் குறித்து மலேசியத் தண்டனைச் சட்டம் பிரிவு 420-இன் கீழ் (ஏமாற்றுதல்) போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here