ரினி தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் வழி கெளரவிப்பு

ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு சேவையைக் கௌரவிக்கும் நோக்கில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் சிறப்பு விருந்துபசார நிகழ்ச்சி அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. கல்விப் பணியில் சோர்வின்றி ஆக ஈடுபட்டு வரும் ஆசிரியர்களின் பங்களிப்பைப் பாராட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பாலமுருகன் தலைமையில் செயலாயினர் இணைந்து கிங்ஸ்டன் தங்கும் விடுதியில் ஆசிரியர்களுக்கான விருந்தை சிறப்பாக நடத்தினர். நிகழ்ச்சியில் ஜோகூர் பாரு மாவட்டக் கல்வி இலாகா அதிகாரி திருவாளர் அட்னான் பின் சம்சுடின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஆசிரியர்களின் சேவையைப் பாராட்டினார்.
இன்றைய கல்விச் சூழலில் மாணவர்களை அணுகும் முறையில் புதிய சிந்தனைகளும் மாற்று கற்பித்தல் உத்திகளும் அவசியம் என அவர் தனது உரையில் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஜோகூர் மாநில பாலர் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளி நிர்வாகப் பிரிவு உதவி இயக்குநர் திருவாளர் இரா. இரவிச்சந்திரன், ரினி தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு பணியைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தார். பள்ளியின் தலைமையாசிரியை சு. தமிழ்ச்செல்வி தனது உரையில், “ஆசிரியர்கள் நாட்டின் வளர்ச்சிக்கான முக்கிய தூண்கள்” எனக் குறிப்பிட்டு, மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் பணியில் ரினி தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
நிகழ்வில் ஜோகூர் சமூக உருமாற்றம் மற்றும் ஒற்றுமை நலச்சங்கத்தின் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சிவதாஸ் அவர்களும் துணைவியாருடன் கலந்து சிறப்பித்தார். அதேபோல் கஸ்தூரி மெட்டல்ஸ் மற்றும் மிஷனரி நிர்வாக இயக்குநர் டத்தோ செல்வேந்திரன் மகேஸ்வரன், இளம் தொழிலதிபர் லிங்கேஸ்வரன் மதிவாணன் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறப் பலரும் நன்கொடைகள் மூலம் ஆதரவு வழங்கியதும் குறிப்பிடத்தக்கது. பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பாலமுருகன், மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஆசிரியர்களும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம் என வலியுறுத்தினார். நிகழ்வின் நிறைவில் ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டதுடன், அனைவருக்கும் நன்றியும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டன.
கோகி கருணாநிதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here