டில்லிராணி முத்து
உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் 26 ஆண்டுகளாக நிலவி வரும் 245 தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுப் பிரச்சினைக்கு அடுத்த வாரத்தில் நிரந்தர தீர்வு காணப்படும் என ஊராட்சி மேம்பாட்டுத்துறை அமைச்சரும் தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுபினருமான ஙா கோர் மிங் உறுதியளித்தார்.வெள்ளிக்கிழமை தெலுக் இந்தான் நகராண்மைக்கழக மண்டபத்தில் மதியம் 2.00 மணி தொடங்கி மாலை 5.30 மணியளவில் நடைபெற்ற மாபெரும் ஹாரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அவர், விருந்துபசரிப்பு நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடத்தில் இதனை தெரிவித்தார்.
உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் அமைந்துள்ள மேரி தோட்டம், நைகல் கார்டனர் தோட்டம், புக்கிட் தாகார் தோட்டம், சுங்கை திங்கி தோட்டம், மிஞ்ஞாக் தோட்டம் ஆகிய 5 தோட்டங்களைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுப் பிரச்சினை கடந்த 1998 ஆம் ஆண்டு தொடங்கி இன்றளவும் நீடிக்கிறது. அத்தோட்டங்களில் பணிப்புரிந்த 245 தோட்டப் பாட்டாளிகளின் குடும்பத்தினர் வீடுகள் எதுவும் வழங்கப்படாமலேயே அவர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு தோட்ட நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியது.
கடந்த 26 ஆண்டுகளாக இந்த வீட்டுப் பிரச்சினையை எதிர்நோக்கி வந்த மேரி தோட்டம், நைகல் கார்டனர் தோட்டம், புக்கிட் தாகார் தோட்டம், சுங்கை திங்கி தோட்டம், மிஞ்ஞாக் தோட்டம் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தோட்ட தொழிலாளர்களின் இன்னல்களுக்கு விரைவில் தீர்வு பிறக்க போகிறது என்றும் அமைச்சர் ஙா கோர் மிங் கூறினார். கடந்த 1998 ஆம் ஆண்டு தொடங்கி இந்த 5 தோட்டங்களிலும் இப்பிரச்சினை நீடித்து வரும் நிலையில், 26 ஆண்டுகள் கடந்தும் இந்த விவகாரத்திற்கு தீர்வு காணப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் ஙா கோர் மிங், இந்த 5 தோட்டங்களையும் சேர்ந்த 245 தோட்ட பாட்டாளிகள் இனியும் கவலைப் பட வேண்டாம் என்றார்.
இத்தனைக் காலமாக இருளில் மூழ்கியிருந்த அவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றிவைக்கப்படும் என்றும் உறுதியளித்த அவர், அடுத்த வாரம் இதற்கான நல்ல செய்தியை அரசாங்கம் அறிவிக்கும் என்றும் குறிப்பிட்டார்.மேலும் இந்த வீடமைப்பு திட்டத்திற்கு அரசாங்கம் பெரிய அளவிலான மானியத்தை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.






















