பகாங் மாநிலத்தின் மெந்தகாப் வட்டாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதும், நூற்றாண்டுப் பழமை வாய்ந்ததுமான 1 1/2 மைல் கல்லுக்கோரி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தின் 49-ஆம் ஆண்டு தீமிதித் திருவிழா, கடந்த மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்ற வைபவத்துடன் மிகச் சிறப்பாகத் தொடங்கியுள்ளது.தலைமைத் குருக்கள் சிவஸ்ரீ வி. மணி குருக்கள் தலைமையில் நடைபெற்ற இக்கொடியேற்ற விழாவில் திரளான உள்ளூர் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். வரும் நாட்களின் முக்கிய அங்கமாக விளங்கும் தீமிதித் திருவிழாவை முன்னிட்டு, பகாங் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடம், காவடிகள் ஏந்தி அம்பாளுக்குத் தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்தவுள்ளனர்.
பால் குடம் எடுக்கும் விபரம்:
ஆலய நிர்வாகத்தின் அறிவிப்பின்படி, மே 23 முதல் மே 29 வரையிலான நாட்களில் பக்தர்கள் தினசரி காலை 7:45 மணிக்கும், மாலை 4:00 மணிக்கும் பால் குடம் எடுக்கலாம். (மாலை 3:00 மணி முதல் 4:30 மணி வரை இதற்கான சிறப்பு நேரமாக ஒதுக்கப்பட்டுள்ளது).
முக்கிய அறிவிப்பு:
வரும் மே 30-ஆம் தேதி சனிக்கிழமை அன்று பக்தர்கள் பால் குடம் எடுக்க அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, மே 31-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6:30 மணி முதல் பக்தர்கள் மீண்டும் பால் குடம் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்ட இரத ஊர்வலம்:
மே 31 (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7:00 மணிக்கு ஆலயத்திலிருந்து அம்பாளின் திருவீதி உலா (இரத புறப்பாடு) மிகச் சிறப்பாகத் தொடங்கவுள்ளது. இந்த இரத ஊர்வலம் தாமான் சாகா, தாமான் ரிம்பா, மற்றும் தாமான் சாகா இண்டா ஆகிய குடியிருப்புப் பகுதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளது. திருவிழா நாட்களில் திருப்பொன்னூஞ்சல் வைபவம், மதுரைவீரன் முனீஸ்வரர் பூஜை, இடும்பன் பூஜை போன்ற சிறப்பு வழிபாடுகளும் நடைபெறவுள்ளன. விழாவிற்கு வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கும் மகேஸ்வர பூஜைக்குப் பின் தினசரி அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உள் மாநில மற்றும் வெளிமாநிலப் பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி அம்பாளைத் தரிசிக்கத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளையும் ஆலய நிர்வாகத்தினர் முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றனர். இத்திருவிழாவில் பேராதரவு தந்து கலந்து கொள்ளுமாறு ஆலயத் தலைவர் சுதாகரன், துணைத் தலைவர் சிவன், ஆலய செயலாளர் திருமதி ஆரியமாலா, துணை செயலாளர் பரம், பொருளாளர் ராமன் ஆகியோர் ஆலய நிர்வாகத்தினர் சார்பில் பக்தர்களுக்கு அன்பான அழைப்பு விடுத்துள்ளனர்.
- செய்தியாளர்: பி. ராமமூர்த்தி









