16ஆவது பொதுத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடக்கூடும்; சூசகமாக கூறிய புக்கிட் கந்தாங் MP

புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் அபு ஹுசைன் ஹாஃபிஸ் சையத் அப்துல் ஃபசல், 16ஆவது பொதுத் தேர்தலில் (GE16) சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடக்கூடும் என சூசகமாகத் தெரிவித்துள்ளார். முன்னர் பெர்சத்து கட்சியைச் சேர்ந்தவரான ஹுசைன், அரசியல் சூழல் இன்னும் நிலையற்றதாக உள்ளதால், அதனை ஆய்வு செய்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறியதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.

எனது தனிப்பட்ட பலத்திலும், மக்களுக்குச் சேவை செய்த எனது சாதனைகளிலும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. நான் என் நண்பர்களின் கட்சிகளைச் சார்ந்து வாழ விரும்பவில்லை. எனது பலங்களைச் சார்ந்து ஒரு கட்சி இயங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தற்போதைய அரசியல் சூழல், எந்தவொரு கட்சியும் தனது பெயரை மட்டுமே கொண்டு இனி வெற்றியைப் பெற முடியாது என்பதைக் காட்டியுள்ளது  என்று பேராக், புக்கிட் கந்தாங்கில் நடந்த ஒரு நிகழ்வில் அவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

மேலும், புக்கிட் கந்தாங் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் மூன்று மாநிலத் தொகுதிகளிலும் தனக்கு விருப்பமான வேட்பாளர்களை நிறுத்தும் திட்டங்களையும் அவர் வெளிப்படுத்தினார். அந்தத் தொகுதிகள் திராங், சாங்காட் ஜெரிங் மற்றும் கோலா செபெடாங் ஆகும். உள்ளூர் அரசியல் பலத்தைத் தீர்மானிப்பதில் இவை முக்கியத்துவம் வாய்ந்த தொகுதிகள் என்று அவர் விவரித்தார். இந்த முறை, எனக்கு எனது சொந்த அணி வேண்டும். மூன்று மாநிலத் தொகுதிகளிலும் எனது மக்கள் இருக்க வேண்டும் என்றார். 2023 இன் பிற்பகுதியில் பிரதமர் அன்வார் இப்ராஹிமின் நிர்வாகத்தை ஆதரிக்க முடிவு செய்த பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹுசினும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here