விஜய்க்கு எதிராக பேசிய ஒரே காரணத்துக்காக.. என் மீது கிட்னி திருட்டு அவதூறு – நடிகை ஜூலி

சென்னை, நர்ஸாக பணியாற்றி வந்த ஜூலி, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் குரல் கொடுத்து பிரபலமானார். அந்த போராட்டத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்ற அவர், பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். அண்மைக்காலமாக ஜூலியின் பெயர் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. திமுக ஆதரவாளருமான ஜூலி, சமீப காலமாக தவெக கட்சி தலைவர் மற்றும் நடிகர் விஜய் குறித்து தொடர்ந்து விமர்சன வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் கிட்னி திருட்டு மோசடியில் நர்ஸாக பணியாற்றிய நடிகை ஜூலிக்கு தொடர்பு இருப்பதாக கூறி சமூக வலைதளத்தில் வீடியோக்களும் வெளியானது. இது தொடர்பாக ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறி தொடர்ந்து யூடியூபர்கள் வீடியோக்களை வெளியிட்டு இருந்தனர்.

தனக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளும் பொய்யான செய்திகளையும் பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் புகார் அளித்திருந்தார். கிட்னி திருட்டு, சட்டவிரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்ட எந்தவித செயல்களிலும் தான் ஈடுபடவில்லை எனவும், பொய்யாக தன்மீது குற்றம் சாட்டிய நபர்களை பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், நடிகை ஜூலி கடந்த மார்ச் மாதம் அளித்த புகாருக்கு காவல் தரப்பிடமிருந்து பதில் கொடுக்கப்பட்டதாக நடிகை ஜூலி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்

செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஜூலி, “நான் கிட்னி திருடி விட்டேன் என்று நிறைய பேரு என்மேல புகாரும், அவதூரும் பரப்பினாங்க. நான் கிட்னி திருடியதாக என்மேல அவதூறு பரப்பின 8 பேர் மேல கடந்த மார்ச் மாதம் என் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தேன். அதற்கு கடந்த 18ம் தேதி எனக்கு பதில் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள், அதுவும் தவெக ஆட்சியில எனக்கு எதுக்கு இந்த நோட்டீஸ் வந்தது என்று எனக்கு தெரியல. எனக்கு இது 3வது கல்யாணம் போன்ற அவதூறுகள் கிரிமினல் அவதூறு இல்லை எனவும், அது சிவில் அவதூறு என்பதால் எங்களால் நடவடிக்கை எடுக்க முடியாதுனு போலீஸ் சொல்லியிருக்காங்க. இதுகுறித்து என்கிட்ட எந்தவித விசாரணையும் காவல்துறையினர் தரப்பில் நடத்தப்படவில்லை. இன்ஸ்டா மூலமா இன்ஸ்டண்ட்டா விஜய் அண்ணா சிஎம் ஆனதா சொல்றாங்க. அவங்க ஆளுக்கு எதிரா பேசுறவங்கள இன்ஸ்டண்ட்டா இப்படி தாக்குதல் நடத்துறது விட்டுட்டு, மக்களுக்கு எதாவது இன்ஸ்டண்ட்டா நல்லது பண்ணா நல்லாருக்கும் ” என பேசியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here