ஜோகூர் மாநிலத் தேர்தல் தேதி அடுத்த வாரம் வெளியாகும்: தேர்தல் ஆணையம் ஜூன் 12-இல் அவசரக் கூட்டம்!

கோலாலம்பூர்:

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 16-ஆவது ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான (PRN Johor) வேட்புமனுத் தாக்கல் மற்றும் வாக்குப்பதிவு தேதிகளைத் தீர்மானிப்பதற்காக, மலேசியத் தேர்தல் ஆணையம் (SPR) அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) ஒரு சிறப்பு அவசரக் கூட்டத்தைக் கூட்டவுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் செயலாளர் டத்தோ கைருல் ஷஹ்ரில் இத்ருஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த உயர்நிலைக் கூட்டம் தேர்தல் ஆணையத் தலைவர் டத்தோஸ்ரீ ரம்லான் ஹாரூன் தலைமையில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் தேர்தல் தேதிகள், வாக்காளர் பட்டியல் மற்றும் இதர தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு, கூட்டம் முடிந்தவுடன் செய்தியாளர்கள் சந்திப்பில் தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

1895-ஆம் ஆண்டு ஜோகூர் மாநில அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்ட 60 நாட்களுக்குள் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும்.

“கடந்த ஜூன் 2, 2026 அன்று ஜோகூர் மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்டது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, மாநிலச் சபாநாயகர் டத்தோ டாக்டர் முகமட் புவாட் சர்க்காஷியிடமிருந்து தேர்தல் ஆணையம் முறையாகப் பெற்றுள்ளது,” என்று டத்தோ கைருல் ஷஹ்ரில் உறுதிப்படுத்தினார்.

தேர்தல் தேதிகள் அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ள நிலையில், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் தகுதியுடைய வாக்காளர்களுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு விண்ணப்பங்கள் இன்று முதல் அதிகாரப்பூர்வமாகத் திறந்துவிடப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் வேறொரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here