உயர்தொழில்நுட்பத் துறையில் புதிய புரட்சி: TVET 2.0 பட்டதாரிகளுக்குக் குறைந்தபட்சச் சம்பளம் RM2,500 ஆக உயர்வு!

கோலாலம்பூர்:

நாட்டில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட ‘தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி’ (TVET 2.0) திட்டத்திற்காக, அரசாங்கம் 50 மில்லியன் ரிங்கிட் நிதியை அதிரடியாக ஒதுக்கியுள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.

ஆயினும், இந்த பிரம்மாண்ட நிதி ஒதுக்கீட்டிற்குப் பிரதமர் ஒரு கடுமையான நிபந்தனையையும் விதித்துள்ளார். இத்திட்டம் முழுமையான வெற்றியை அடைய வேண்டுமானால், தனியார் நிறுவனங்களும் தொழில் துறை நிறுவனங்களும் அரசாங்கத்துடன் இணைந்து தங்களின் முழுப் பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

தேசிய TVET தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற ‘TVET 2.0’ தொடக்க விழாவில் உரையாற்றிய பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியதாவது:

“ஒரு மலேசியக் குழந்தை தொடக்கப் பள்ளியிலிருந்து பல்கலைக்கழகம் வரை படித்து முடிக்கும் வரையிலான ஒட்டுமொத்த கல்விச் செலவையும் இந்த அரசாங்கமே முழுமையாக ஏற்றுக்கொள்கிறது. ஆனால், அவர்கள் படித்து முடித்தவுடன், எவ்வித முதலீடோ அல்லது பங்களிப்போ செய்யாத சில தனியார் நிறுவனங்கள் அவர்களை நேரடியாக வேலைக்கு அமர்த்தி லாபம் ஈட்டுகின்றன. அரசாங்கம் உருவாக்கித் தந்த கட்டமைப்பின் பலனை மட்டுமே அவர்கள் அனுபவிக்கிறார்கள்.

இனி இது நீடிக்கக் கூடாது. தனியார் நிறுவனங்கள் நமது இளைஞர்களுக்கு முறையான, கட்டமைக்கப்பட்ட பயிற்சிகளை வழங்க தங்களின் கதவுகளைத் திறக்க வேண்டும். பயிற்சி பெறும் மாணவர்கள் தங்களின் படிப்பு முடிந்ததும் அதே நிறுவனத்தில் பணிபுரிவதை உறுதி செய்யும் வகையில் புதிய ஒப்பந்தங்களை நிறுவனங்கள் உருவாக்க வேண்டும்,” என்று பிரதமர் வலியுறுத்தினார்.

இவ்விழாவில் கலந்துகொண்ட துணைப் பிரதமரும் தேசிய TVET கவுன்சில் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி பேசுகையில், புதிய பரிமாணத்துடன் தொடக்கப்பட்டுள்ள ‘TVET 2.0’ திட்டம் ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு (AI), கிரிப்டோகரன்சி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கடல்சார் பொறியியல் போன்ற நவீன உயர்தொழில்நுட்பத் துறைகளில் அதிகக் கவனம் செலுத்தும் என்றார்.

நாடு முழுவதும் 12 அமைச்சகங்கள், மாநில அரசாங்கங்கள் மற்றும் தனியார் துறையின்கீழ் இயங்கும் 1,345 TVET கல்வி நிறுவனங்கள் இத்திட்டத்திற்கு முழு ஆதரவை வழங்கும்.

இனி TVET 2.0 திட்டத்தின்கீழ் படித்து முடிக்கும் பட்டதாரிகளுக்கு 100 விழுக்காடு வேலைவாய்ப்பு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜாஹிட் ஹமிடி, இதற்காகப் பல்வேறு தொழில் துறை கூட்டாளிகளுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்றார்.

மேலும், இதுவரை இருந்த குறைந்தபட்சச் சம்பள வரம்பான 1,500 ரிங்கிட் என்ற நடைமுறை மாற்றப்பட்டு, தற்போதைய புதிய தொழில்நுட்பப் பிரிவுகளுக்கு ஏற்ப பல முன்னணி நிறுவனங்கள் TVET பட்டதாரிகளுக்குக் குறைந்தபட்சச் சம்பளமாக 2,500 ரிங்கிட் வரை வழங்க முன்வந்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சியான தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here