பள்ளியில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை?; 45 வயது ஆசிரியர் மீது 14 குற்றச்சாட்டுகள்!

கிள்ளான்:

சபாக் பெர்ணாமில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் 15 வயதுடைய ஆறு மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக சுமத்தப்பட்ட 14 குற்றச்சாட்டுகளை 45 வயது இசை ஆசிரியர் ஒருவர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

இசை ஆசிரியரான இடி ஜொஹான் முஹம்மத் ஜொஹ்டி (வயது 45) என்ற அந்த நபர், நீதிபதி ஷரீஃபா ஹாஸ்சிண்டி சையத் ஒமர் முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது, தான் குற்றமற்றவர் எனத் தெரிவித்தார்.

குற்றப்பத்திரிகையின்படி, செகிஞ்சான் மற்றும் சபாக் பெர்ணாம் பகுதிகளில் உள்ள வகுப்பறை, இசை அறை, கணித அறை, இசைக் கருவிகள் சேமிப்பு அறை, வீடு மற்றும் வாகனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 2025 ஜனவரி முதல் 2026 பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் இந்த அத்துமீறல்கள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கு, ‘2017 குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின்’ பிரிவு 14(a) மற்றும் பிரிவு 16(1)-இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி விதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், நம்பகமான பொறுப்பில் உள்ளவர் என்பதால் பிரிவு 16(1)-இன் கீழ் கூடுதலாக ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், குறைந்தது இரண்டு பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

நீதிமன்ற விசாரணையின் போது, துணை அரசு வழக்கறிஞர் நோர் சுஹைலி அபு பக்கார், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார். ஒருவேளை ஜாமீன் வழங்கப்பட்டால், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 20,000 ரிங்கிட் ஜாமீன் தொகை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மாணவிகளைத் தொடர்புகொள்ளக் கூடாது, மாதந்தோறும் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் போன்ற நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என்றும் கோரினார்.

பாதுகாப்பு தரப்பு வழக்கறிஞர் டத்தோ முஹம்மத் இம்ரான் தம்ரின் வாதிடுகையில், “எனது வாடிக்கையாளருக்கு மனைவியும் பள்ளியில் படிக்கும் குழந்தையும் உள்ளனர். 2002-ஆம் ஆண்டு முதல் ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவர் மீது இதுவரை எந்தவொரு ஒழுங்கு நடவடிக்கையோ, குற்றப் பின்னணியோ இல்லை” எனக் குறிப்பிட்டு ஜாமீன் தொகையைக் குறைக்குமாறு கோரினார்.

இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி, 14 குற்றச்சாட்டுகளுக்கும் சேர்த்து மொத்தம் 30,000 ரிங்கிட் ஜாமீன் தொகையுடன், அரசுத் தரப்பு கோரிய கூடுதல் நிபந்தனைகளின் அடிப்படையில் ஜாமீன் அனுமதித்தார். அத்துடன், குற்றம் சாட்டப்பட்டவர் தனது சர்வதேச கடப்பிதழை (Passport) நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது.

இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் ஜூலை 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here