விபத்தில் இரு பிள்ளைகளை காப்பாற்றிய தந்தை; குடும்பத்துடன் காரில் தங்கும் அவலம்!

(ரெ.மாலினி)

மலாக்கா:
கடந்த வியாழக்கிழமை இரவு புக்கிட் புருவாங் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், தீயில் சிக்கிக்கொள்ள இருந்த தனது இரு பிள்ளைகளைக் காப்பாற்றிய தந்தை எஸ். பாலமுருகன் (32), அந்த சம்பவம் குறித்து இன்னும் அதிர்ச்சியில் உள்ளார்.

இரவு சுமார் 11.20 மணியளவில், தனது வீட்டில் இருந்தபோது, தூக்கத்தில் இருந்து எழுந்து கழிவறைக்குச் சென்ற பாலமுருகன், தனது பிள்ளைகள் தூங்கிக் கொண்டிருந்த அறையில் இருந்து தீப்பிழம்புகள் வெளியேறுவதைக் கண்டார்.

10 மற்றும் 16 வயதுடைய இரு பிள்ளைகளும் அந்த அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். அறையின் கதவைத் திறக்க முயன்றும் முடியாததால், பாலமுருகன் கதவை காலால் உதைத்து உடைத்து, இரு பிள்ளைகளையும் வெளியே மீட்டார். பின்னர் குடும்பத்தினர் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறினர்.

இந்தச் சம்பவத்தில் 10 வயது மகனின் உள்ளங்காலில் தீக்காயம் ஏற்பட்டதால், அவர் தற்போது மெலாக்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
“நான் மிகவும் பதற்றமடைந்தேன். இதற்கு முன்பு எங்கள் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதில்லை. தீ மிக வேகமாகப் பரவியது. சிறிது தாமதமாகியிருந்தால் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும். என் பிள்ளை தீயில் சிக்கியிருக்கவும் வாய்ப்பு இருந்தது,” என்று பாலமுருகன் தெரிவித்தார்.

இரண்டு ஆண்டுகளாக அந்த வாடகை வீட்டில் வசித்து வந்த அவர், தற்போது மனைவி ஏ. நித்தியா மற்றும் 3 முதல் 16 வயது வரையிலான ஐந்து பிள்ளைகளுடன் வீட்டை இழந்து, மருத்துவமனைக்கு அருகில் காரிலேயே தற்காலிகமாக தங்கியுள்ளார்.

மாதம் 1,700 ரிங்கிட் வருமானம் பெறும் பாலமுருகன் தொழில்நுட்ப நிபுணராக பணியாற்றுகிறார். அவரது மனைவி பாதுகாப்பு காவலராக பணிபுரிகிறார். புதிய வீடு வாடகைக்கு எடுக்க தேவையான முன்பணம் செலுத்துவது அவர்களுக்கு பெரும் சிரமமாக உள்ளது.

தீ விபத்தில் பாடப்புத்தகங்கள், பள்ளி உடைகள், அன்றாட உடைகள் உள்ளிட்ட பல பொருட்களையும் குடும்பம் இழந்துள்ளது.

இதற்கிடையில், ஹங் துவா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் அடாம் அட்லி
அவரது குடும்பத்திற்கு தற்காலிகமாக தங்குமிட வசதிச் செய்து தருவதுடன், புதிய வாடகை வீட்டிற்கான முன்வ்பணத்திற்கும் உதவ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

“இந்த மாதம் அந்த குடும்பம் தங்குவதற்கு போதுமான இடம் இருப்பதை உறுதி செய்வோம். மேலும், அவர்களுக்கு ஏற்ற புதிய வாடகை வீட்டிற்கான முன்பணத்தையும் வழங்க உதவுவோம்,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here