கோலாலம்பூர்:
சிலாங்கூர், நெகிரி செம்பிலான், சபா, சரவாக் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் இன்று மதியம் 12 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழையும், புயல் காற்றும் வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையமான METMalaysia எச்சரித்துள்ளது.
சிலாங்கூரின் சிப்பாங் மற்றும் கோலா லங்காட் பகுதிகளிலும், நெகிரி செம்பிலான் மாநிலத்தின் போர்டிக்சன் பகுதியிலும் இந்த மோசமான வானிலை, தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சரவாக்கில் சரிகேய் மற்றும் பெத்தோங் பகுதிகளிலும், சபாவில் தாவாவ், செம்பூர்ணா, கலாபங்கான் ஆகிய இடங்களிலும் இதே போன்ற வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடிக்கும் அல்லது 20 மில்லி மீட்டருக்கும் அதிகமான தீவிர மழைப் பொழிவைக் குறிக்கும் இந்த குறுகிய கால இடிமழை எச்சரிக்கையானது ஆறு மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் METMalaysia விளக்கியுள்ளது.
இதன் காரணமாக, பொதுமக்கள் அனைவரும் METMalaysia அதிகாரப்பூர்வ இணையதளம், சமூக வலைத்தளங்கள் மற்றும் myCuaca செயலியைத் தொடர்ந்து பார்வையிட்டுத் தற்போதைய வானிலை நிலவரங்களை அறிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.























