“குடும்ப வன்முறையைச் சகித்துக் கொள்ளாதீர்கள்!” — ஆஸ்திரேலியாவில் பினாங்குப் பெண் பலியான சம்பவத்தில் துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் ஆவேசம்!

கோலாலம்பூர்:

குடும்ப வன்முறையை ஒருபோதும் தனிப்பட்ட குடும்ப விவகாரமாகக் கருதவோ அல்லது சகித்துக்கொள்ளவோ கூடாது எனப் பெண்கள், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் உறுதியாக வலியுறுத்தியுள்ளார்.

கடந்த மாதம் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் குடும்ப வன்முறைச் சம்பவத்தால் கொடூரமாகக் கொல்லப்பட்ட பினாங்கைச் சேர்ந்த 28 வயது பெண் டான் கா மிங் குடும்பத்தினருக்குத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

வன்முறையை ஆரம்பத்திலேயே தடுத்தல், பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான அவசரப் பாதுகாப்பு அளித்தல் மற்றும் அவர்களுக்கு உதவிகளை வழங்குதல் ஆகியவை ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாகும் எனத் துணை அமைச்சர் குறிப்பிட்டார்.

“குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக ‘Talian Kasih’ 15999 என்ற அவசர உதவி எண் மூலமாகவோ அல்லது 019-261 5999 என்ற புலனம் (WhatsApp) எண் வழியாகவோ 24 மணி நேரமும் அமைச்சைத் தொடர்பு கொண்டு பாதுகாப்பு மற்றும் ஆலோசனைகளைப் பெறலாம்,” என அவர் கேட்டுக்கொண்டார்.

ஆஸ்திரேலியா பெர்த் நகரில் கொல்லப்பட்ட மூன்று குழந்தைகளின் தாயான டான் கா மிங் விவகாரத்தில், அங்குள்ள அதிகாரிகள் மேற்கொண்டு வரும் அதிகாரப்பூர்வ விசாரணைகளை மலேசிய அரசாங்கம் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், பெரும் சோகத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினரின் தனியுரிமைக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான சட்டப் பாதுகாப்பையும் ஆதரவையும் அமைச்சு தொடர்ந்து பலப்படுத்தும் என்றும் லிம் ஹுய் யிங் உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here