தேசிய விலங்கியல் பூங்காவில் 1.2 மீட்டர் உயரத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: அனைத்து விலங்குகளும் பாதுகாப்பாக இருப்பதாக நிர்வாகம் உறுதி!

கோலாலம்பூர்:

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் கனமழை காரணமாகக் கிள்ளான் பள்ளத்தாக்கு, உலு கிள்ளானில் உள்ள சுங்கை பாண்டான் மற்றும் சுங்கை கெமன்சா ஆகிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் தேசிய விலங்கியல் பூங்காவில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

எனினும், இச்சம்பவத்தில் பூங்காவிலுள்ள விலங்குகள் எதுவும் காயமடையவோ அல்லது உயிரிழக்கவோ இல்லை என தேசிய விலங்கியல் பூங்காவின் துணைத் தலைவர் டத்தோ ரோஸ்லி லானா உறுதிப்படுத்தியுள்ளார்.

தேசிய விலங்கியல் பூங்காவின் சில பகுதிகளில் வெள்ள நீர் 1.2 மீட்டர் உயரம் வரை உயர்ந்த போதிலும், அனைத்து விலங்குகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

வெள்ளத்தின் போது விலங்குகளைக் காப்பாற்ற நிர்வாகம் உடனடியாகச் செயல்படவில்லை எனச் சில பார்வையாளர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை அவர் முற்றிலும் மறுத்தார்.

நீரின் வேகம் மிகக் கடுமையாக இருந்ததால் வாகனங்களோ அல்லது பூங்கா மின்சார வண்டிகளோ ஊர்வன, நீர்யானை மற்றும் சவான்னா பகுதிகளை நெருங்க முடியாத சூழல் நிலவியதாக அவர் விளக்கமளித்தார்.

“நீர்யானைகளைப் பொறுத்தவரை, அவை இயற்கையாகவே நீரில் மூழ்கி இருக்க விரும்பும் பிராணிகள் என்பதால் வெள்ளத்தால் அவற்றுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

வெள்ள நீர் வடிந்ததும் படிந்திருந்த தடிமனான சகதிகள் அனைத்தும் இரண்டே மணி நேரத்திற்குள் ஊழியர்களால் முழுமையாகக் கழுவிச் சுத்தப்படுத்தப்பட்டன,” என்று அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட பெரிய வெள்ளங்களை விட இம்முறைச் சூழல் சிறப்பாகக் கையாளப்பட்டதாகவும், தொடர்ந்து விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் பார்வையாளர்களின் வசதியை உறுதி செய்யத் தீவிர கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் டத்தோ ரோஸ்லி லானா மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here