சிலாங்கூர் சுல்தான் ஆட்சியின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா: அக்டோபர் 25 சிறப்புப் பொது விடுமுறை என அறிவிப்பு!

கோலாலம்பூர்:

மேன்மை தங்கிய சிலாங்கூர் மாநில சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா அவர்களின் 25 ஆண்டு கால பொற்கால ஆட்சியைக் கொண்டாடும் வகையில், வரும் அக்டோபர் 25-ஆம் தேதி சிறப்புப் பொது விடுமுறையாகச் சிலாங்கூர் மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அக்டோபர் 25-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வார இறுதி நாளில் வருவதால், அதற்குப் பதிலாக அக்டோபர் 26-ஆம் தேதி திங்கட்கிழமை மாற்றுப் பொது விடுமுறையாக வழங்கப்படும் எனச் சிலாங்கூர் மாநிலச் செயலாளர் டத்தோ டாக்டர் அஹ்மாட் ஃபாட்ஸ்லி அஹ்மாட் தாஜுடின் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி ‘சுக்மா 2026’ (SUKMA 2026) போட்டிகளின் வெற்றியை முன்னிட்டு வழங்கப்பட்ட சிறப்பு விடுமுறையைப் போன்றே இந்த விடுமுறையும் நடைமுறைப்படுத்தப்படும் என மாநில அரசு கூறியுள்ளது.

இவ்விடுமுறைச் சிலாங்கூர் மாநிலத்தில் பணியாற்றும் மத்திய அரசு மற்றும் மாநில அரசாங்க ஊழியர்கள் அனைவருக்கும் பொருந்தும்.

அதேவேளையில், தனியார் துறை நிறுவனங்களும் தங்களது பணிச்சூழல் மற்றும் அவசிய சேவைத் தேவைகளைக் கருத்தில் கொண்டு தங்களின் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மாநில சுல்தானின் அரியணை ஏறிய 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவை (Silver Jubilee) சிறப்பிக்கும் வகையில், வரும் செப்டம்பர் 28 முதல் நவம்பர் 1-ஆம் தேதி வரை சுமார் 20 சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் அதிகாரப்பூர்வ விழாக்கள் நடைபெற உள்ளன.

இந்நிகழ்ச்சிகளின் முழுமையான விவரங்கள் மற்றும் அட்டவணைச் சிலாங்கூர் மாநிலச் செயலகத்தின் (SUK Selangor) அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here