சபா, சரவாக் விவகாரங்களில் தலையிட வேண்டாம்; பாஸ் தகவல் பிரிவுத் தலைவருக்கு எச்சரிக்கை

சபா, சரவாக் மாநிலங்களுக்குக் கூடுதல் நாடாளுமன்றத் தொகுதிகளை ஒதுக்க அரசாங்கம் தயாராகி வரும் நிலையில், அந்த மாநிலங்களின் அரசியல் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் அஹ்மட் ஃபத்லி ஷாரியை  ‘பார்ட்டி ககசான் ரக்யாட் சபா’  கட்சியின் தலைவர் ஒருவர் எச்சரித்துள்ளார். இந்த நடவடிக்கை குறித்து ஏளனமான கருத்துக்களைத் தெரிவித்ததன் மூலம், போர்னியோ மாநிலங்களுக்கும் புத்ராஜெயாவிற்கும் (மத்திய அரசுக்கும்) இடையே பகையைத் தூண்ட ஃபத்லி முயல்வதாக ககசான் ராக்யாட் கட்சியின் துணைத் தலைவர் மாசியுங் பனா (Masiung Banah) குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்றத் தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கை கோருவதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது. ஏனெனில், அது 1963-ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்தத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொகுதிகளை அதிகரிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்தத்தை எந்தப் பிரதமர் அறிவிக்கிறார் என்பது முக்கியமல்ல; ஏனெனில், ‘போர்னியோ தொகுதி’ (Borneo bloc) நீண்ட காலமாகவே எம்ஏ63-இன் கீழ் இந்த உரிமையைக் கோரி வருகிறது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சபா, தீபகற்ப மலேசியாவில் உள்ள பாஸ் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளையும் தாங்கள் மதிப்பதாகக் குறிப்பிட்ட குவாமுட் (Kuamut) சட்டமன்ற உறுப்பினரான மாசியுங், அதே வேளையில் ஃபத்லியின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் கூறினார். எம்ஏ63-இன் படி சபா, சரவாக் மாநிலங்களில் நாடாளுமன்றத் தொகுதிகளை அதிகரிப்பதற்கு ஏதுவாக அரசியலமைப்பைத் திருத்தப்போவதாகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் செப்டம்பர் 11 அன்று அறிவித்திருந்தார்.

இதற்கிடையில், அன்வாருடன் சேர்ந்து பள்ளத்தில் விழ வேண்டாம்” என்று சபா,சரவாக் தலைவர்களை ஃபத்லி திங்களன்று எச்சரித்திருந்தார்.பாஸுன் நற்பெயரைக் காத்துக்கொள்ளுமாறும், தங்கள் மாநிலங்களுக்கான சரியான முடிவுகளை எடுக்கும் பொறுப்பை சபா, சரவாக் தலைவர்களிடமே விட்டுவிடுமாறும் ஃபத்லிக்கு மாசியுங் அறிவுறுத்தினார். பாஸூன் தீவிரவாதப் போக்குக்குச் சபா, சரவாக் மாநிலங்களில் இடமில்லை. வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், ஒற்றுமை, பரஸ்பர மரியாதை உணர்விற்குப் பெயர் பெற்றவர்கள் போர்னியோ மக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here