சபாவில் அதிகாலையில் தீப்பிடித்து எரிந்த இரு வீடுகள்; உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஜன்னலிலிருந்து குதித்த 13 மற்றும் 18 வயது சிறுமிகள் மருத்துவமனையில் அனுமதி!

கோலாலம்பூர்:

பித்தாசிலுள்ள கம்போங் டண்டுன் பகுதியில் இன்று அதிகாலை இரு வீடுகளை முற்றாக அழித்த பயங்கரத் தீ விபத்திலிருந்து தப்பிக்க, ஜன்னல் வழியே வெளியே குதித்த 13 மற்றும் 18 வயதுடைய இரு சிறுமிகள் படுகாயமடைந்தனர்.

இன்று அதிகாலை 4.55 மணியளவில் இத்தீ விபத்து குறித்து அவசர அழைப்பு பெறப்பட்டதாகப் பித்தாஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் உதவித் தீயணைப்பு கண்காணிப்பாளர் நூர் ஜாலி மஸ்லா தெரிவித்துள்ளார்.

“அழைப்பு வந்ததும் 7 தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழுவினர், 23 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்பவ இடத்திற்கு காலை 5.24 மணிக்குச் சென்றடைந்தனர். அப்போது இரு வீடுகளும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தன. தீயணைப்புப் படையினர் உடனடியாகச் செயல்பட்டுத் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.” என்றார்.

தீயின் பிடியிலிருந்து தப்ப ஜன்னல் வழியே குதித்ததில் காயமடைந்த இரு சிறுமிகளையும், மீட்புக் குழுவினர் வருவதற்கு முன்பே பொதுமக்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.காலை 8.24 மணியளவில் பகுதி முழுமையாகப் பாதுகாப்பானது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கை நிறைவடைந்தது. இத்தீ விபத்திற்கான காரணம் மற்றும் ஏற்பட்ட பொருள் சேதத்தின் மதிப்பு குறித்து தீயணைப்புத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here