கோலாலம்பூர்:
நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாரா ஜூனியர் அறிவியல் கல்லூரிகளிலும் (MRSM) தங்குமிட முழுநேரக் காப்பாளர்களாகப் முன்னாள் இராணுவத்தினரை நியமிக்க ‘மாரா’ (MARA) நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த புதிய திட்டம் 2027 ஜனவரி 1-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும்.
பெசூட் மற்றும் பாலிக் பூலாவ் MRSM கல்லூரிகளில் நடத்தப்பட்ட முன்னோடித் திட்டத்தின் பயனுள்ள முடிவுகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாரா தலைவருமான டத்தோ டாக்டர் அஷ்ரஃப் வஜ்தி தூசுகி தெரிவித்துள்ளார்.
“புத்ரா மலேசியப் பல்கலைக்கழகத்தின் (UPM) சமூக ஆய்வுக் கழகம் நடத்திய ஆய்வில், முன்னாள் இராணுவத்தினரைக் காப்பாளர்களாக நியமிப்பது மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் பாதுகாப்பில் பெரும் நேர்மறை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. அவர்களின் முறையான கண்காணிப்பால் மாணவர்களிடையே பகடிவதை மற்றும் பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தும் சம்பவங்கள் கிட்டத்தட்ட பூஜ்ஜிய நிலையை எட்டியுள்ளன.என்று அவர் சொன்னார்.
முன்னாள் இராணுவத்தினரின் தொடர்ச்சியான மற்றும் முறையான கண்காணிப்பு காரணமாக மாணவர்கள் தங்களை அதிகப் பாதுகாப்பாக உணர்வதோடு, நேரத்தைக் கடைப்பிடித்தல், தங்குமிடங்களைச் சுத்தமாக வைத்திருத்தல் மற்றும் ஆன்மீகச் செயல்பாடுகளில் ஈடுபடுதல் ஆகியவற்றிலும் சிறந்த முன்னேற்றம் கண்டுள்ளனர்.
மேலும், இப்புதிய நியமனங்களின் மூலம் தங்குமிடப் பொறுப்புகளிலிருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதால், அவர்கள் மாணவர்களின் கல்வியிலும் நற்பண்புகளை வளர்ப்பதிலும் முழு கவனம் செலுத்த முடியும் என்று அஷ்ரஃப் வஜ்தி சுட்டிக்காட்டினார்.
கடந்த ஜூலை மாதம் முதல் 10 MRSM கல்லூரிகளில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு சிறந்த பலன்களை அளித்து வரும் நிலையில், புதிய காப்பாளர்களுக்கான சிறப்புப் பயிற்சிப் பாடத்திட்டங்களை வகுக்க UPM உடன் மாரா தொடர்ந்து இணைந்து செயல்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
















