
கோலாலம்பூர்:
தேசிய உயர்கல்வி நிதிக் கழகம் (PTPTN), ஆண்டுதோறும் அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படும் உலக சேமிப்பு தினத்தை முன்னிட்டு, சிம்பான் எஸ்.எஸ்.பி.என். சேமிப்பு மாதம் 2026 (Bulan Menabung Simpan SSPN & BMS 2026) திட்டத்தைத் தொடங்கியுள்ளது. 2018ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முயற்சி தற்போது ஒன்பதாவது ஆண்டை எட்டியுள்ளது.

BMS 2026 தொடக்க விழாவை தேசிய உயர்கல்வி நிதிக்கழகத் தலைவர் டத்தோ ஸ்ரீ நோர்லிசா அப்துல் ரஹிம், சிலாங்கூரிலுள்ள சென்ட்ரல் ஐ-சிட்டி பேரங்காடியில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தேசிய உயர்கல்வி நிதிக்கழக நிர்வாக வாரிய உறுப்பினர் புவான் ஹுஸ்னா பிந்தி அப்துல் ரஹாமான், தேசிய உயர்கல்வி நிதிக் கழகத் தலைமை நிர்வாக அதிகாரி அஹ்மாட் டுசுக்கி அப்துல் மஜிட் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
சிம்பான் எஸ்.எஸ்.பி.என். சேமிப்பு மாதம் என்பது சேமிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதோடு, மலேசிய மக்களின் முதன்மையான கல்விச் சேமிப்புத் தேர்வாக சிம்பான் எஸ்.எஸ்.பி.என். திட்டத்தை ஊக்குவிப்பதற்கான தேசிய உயர்கல்வி நிதிக் கழகத்தின் முக்கியத் திட்டமாகும்.

BMS 2026 திட்டம் நாடு முழுவதும் நவம்பர் 1ஆம் தேதி வரை ஒரு மாதத்திற்கு நடைபெறுகிறது. இக்காலகட்டத்தில் புதிய கணக்குகளைத் திறக்கும் அல்லது கூடுதல் வைப்புத் தொகையைச் செலுத்தும் சேமிப்பாளர்களுக்கு BMS சிறப்புப் பதிப்பிலான பல்வேறு கவர்ச்சிகரமான நினைவுப் பரிசுகளும் காத்திருக்கின்றன. இவ்வாண்டு BMS 2026, ‘கடலுக்கு அடியில்’(Di Bawah Lautan) என்ற கருப்பொருளை முன்வைத்துள்ளது.
‘உங்கள் பிள்ளையின் கதாநாயகனாக வாருங்கள்’ (Jom Jadi Superhero Anak Anda) என்ற வாசகமும் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது.
கடலுக்கடியில் மேற்கொள்ளப்படும் சாகசப் பயணத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கருப்பொருள், சேமிப்புப் பழக்கத்தை உருவாக்குதல், நிதியைத் திட்டமிடுதல், பிள்ளைகளின் கல்விக் கனவுகளை நனவாக்குதல் ஆகியவற்றுக்கான பயணத்தை அடையாளப்படுத்துகிறது. ஒரு பயணத்திற்கு எவ்வாறு முறையான தயாரிப்பும் திட்டமிடலும் தேவையோ, அதேபோன்று பிள்ளைகளின் கல்விப் பயணத்திற்கும் ஆரம்பத்திலிருந்தே நிதித் திட்டமிடலும் சேமிப்பும் அவசியமாகும்.

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளின் கல்விக் கனவை நிறைவேற்றும் கதாநாயகனாகத் திகழும் வகையில், உயர்கல்விக்கான நிதித் திட்டமிடலை முன்கூட்டியே மேற்கொள்ள ஊக்குவிப்பதே BMS 2026 திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் பிள்ளைகளின் உயர்கல்விச் செலவுகளுக்காக முழுமையாகக் கடன்களைச் சார்ந்திருக்கும் நிலையையும் குறைக்க முடியும்.
பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் கல்விக்கான நிதியை முன்கூட்டியே திட்டமிடுவதோடு,சிறிய தொகையாக இருந்தாலும் தொடர்ந்து சேமிக்கும் பழக்கத்தை உருவாக்க தேசிய உயர்கல்வி நிதிக்கழகம் ஊக்குவித்து வருகிறது. தேசிய உயர்கல்வி நிதிக்கழகத் தலைவர் டத்தோ ஸ்ரீ நோர்லிசா அப்துல் ரஹிம் கூறுகையில், சேமிப்பு என்பது எதிர்காலத் தேவைக்காகப் பணத்தை ஒதுக்கி வைப்பது மட்டுமல்ல. பிள்ளைகளின் கல்விப் பயணத்தைத் திட்டமிடுவதற்குக் குடும்பங்களுக்கு அதிகமான வாய்ப்புகளையும் தேர்வுகளையும் வழங்கும் ஒரு முன்னேற்பாடாகவும் சேமிப்பு அமைகிறது என்றார்.
சிம்பான் எஸ்.எஸ்.பி.என். தொடர்ந்து சிறந்த சேமிப்புத் திட்டமாகச் செயல்பட்டு வருவதையும் சேமிப்பாளர்களின் ஆதரவு தொடர்ந்து வலுவாக இருப்பதையும் அதன் வளர்ச்சி நிரூபிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு BMS திட்டத்தின் மூலம் 25 கோடி ரிங்கிட் சிம்பான் எஸ்.எஸ்.பி.என். வைப்புத் தொகையைப் பெற தேசிய உயர்கல்வி நிதிக் கழகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. 2026 ஆகஸ்டு 31ஆம் தேதி வரை சிம்பான் எஸ்.எஸ்.பி.என். திட்டத்தின்கீழ் 76 லட்சத்து 60 ஆயிரம் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளதுடன் மொத்தம் 2,586 கோடி ரிங்கிட் வைப்புத் தொகை பெறப்பட்டுள்ளது.
BMS 2026 மக்களிடையே சேமிப்புப் பண்பாட்டை மேலும் வலுப்படுத்துவதோடு பொறுப்புணர்வும் நிதி அறிவும் கொண்ட மடானி தலைமுறையை உருவாக்கும் தளமாகத் தொடர வேண்டும் என்றும் டத்தோ ஸ்ரீ நோர்லிசா தெரிவித்தார். சிம்பான் எஸ்.எஸ்.பி.என். கல்விச் சேமிப்புத் திட்டம் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.

ஆண்டுக்கு 8,000 ரிங்கிட் வரை வருமான வரி மதிப்பீட்டுச் சலுகை, சேமிப்பாளர்களுக்கான இலவச தக்காஃபுல் பாதுகாப்பு தகுதிபெறும் ஒரு குடும்பத்திற்கு 10,000 ரிங்கிட் வரை இணை மானியம்,போட்டித்தன்மை வாய்ந்த ஈவுத்தொகை ஆகியவை இதில் அடங்கும். இது ஷரியா விதிகளுக்கு உட்பட்ட சேமிப்புத் திட்டமாக இருப்பதோடு, அரசாங்க உத்தரவாதமும் பெற்றுள்ளது.
தொடக்க விழாவையொட்டி, சிம்பான் எஸ்.எஸ்.பி.என். சேமிப்புத் திட்டத்தின் பல்வேறு பரிசுக் குலுக்கல்களில் வெற்றி பெற்றவர்களும் கௌரவிக்கப்பட்டனர். அவர்களில், சிம்பான் எஸ்.எஸ்.பி.என். பிளஸ் 2026 ‘வாவ்! பரிசுக் குலுக்கலின் இரண்டாவது சுற்றில், நொராய்னின் பிந்தி பாசிர் 20 ஆயிரம் ரிங்கிட் முதன்மைப் பரிசை வென்றார். பிள்ளைகளின் எதிர்காலக் கல்விக்காக அவர் சிம்பான் எஸ்.எஸ்.பி.என். பிளஸ் திட்டத்தில் தொடர்ந்து சேமித்து வந்துள்ளார்.
நொராய்னின் சார்பில் பேசிய அவரின் கணவர் முகமது டோலி பின் முகமது நோர், இந்த வெற்றி தங்கள் குடும்பத்தினருக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியதாகக் கூறினார்.
சிறிய நடவடிக்கைகளின் வழியே பிள்ளைகளிடம் சேமிப்புப் பழக்கத்தை உருவாக்கி வருவதாகவும் அன்றாடச் செலவுப் பணத்திலிருந்து ஒரு பகுதியைத் தனியாகச் சேமிக்கும்படி பிள்ளைகளை ஊக்குவிப்பதாகவும் அவர் தெரிவித்தார். என் பிள்ளைக்கு செலவுக்குப் பணம் கிடைக்கும்போது,தினமும் ஒரு ரிங்கிட்டைத் தனியாக எடுத்து வைக்குமாறு ஊக்குவிப்பேன். அல்ஹம்துலில்லாஹ், என் ஆலோசனையை அவர் ஏற்றுக்கொண்டதன் பலன்தான் இது என்று அவர் கூறினார்.
சே ஹான் சியோங், தனது மகளின் எதிர்கால உயர்கல்வித் தேவைக்காக சிம்பான் எஸ்.எஸ்.பி.என். பிளஸ் கணக்கைத் திறந்து சேமித்து வந்த நிலையில், அதே பரிசுக் குலுக்கலில் 10 ஆயிரம் ரிங்கிட் மூன்றாம் பரிசை வென்றார். இந்த வெற்றி தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாகத் தெரிவித்த அவர், பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர் ஆரம்பத்திலிருந்தே சேமிப்பைத் திட்டமிடுவது முக்கியம் என்றும் குறிப்பிட்டார்.
நுருல் ஹயானி பிந்தி முஸ்தபா கமால், சிம்பான் எஸ்.எஸ்.பி.என். பிளஸ் 2026 ‘வாவ்!’ பரிசுக் குலுக்கலின் இரண்டாவது சுற்றில் 10 ஆயிரம் ரிங்கிட் மூன்றாம் பரிசை வென்றார். எதிர்பாராத இந்தப் பரிசு தனது குடும்பத்திற்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகக் கூறிய அவர், பிள்ளைகளின் கல்விக்காக சிம்பான் எஸ்.எஸ்.பி.என். திட்டத்தில் தொடர்ந்து சேமிப்பதற்கு இது கூடுதல் ஊக்கமாக அமைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

அதேவேளையில், சித்தி ஆயிஷா பிந்தி முகமது நோஶீ புதிய சிம்பான் எஸ்.எஸ்.பி.என். சேமிப்பாளர்களுக்கான இரண்டாவது சுற்றுப் பரிசுக் குலுக்கலில்(Simpan SSPN Baru Slay! -Cabutan Slay 2) யமஹா என்.வி.எக்ஸ். 155 மோட்டார் சைக்கிளை முதன்மைப் பரிசாக வென்றார். பிள்ளைகளின் கல்விக்காக மேற்கொண்ட சேமிப்பின் மூலம் கிடைத்த கூடுதல் பலனாக இந்தப் பரிசைக் கருதுவதாக அவர் தெரிவித்தார்.
குடும்பங்களைச் சேமிப்புப் பண்பாட்டுடன் மேலும் நெருக்கமாக இணைக்கும் வகையில் BMS 2026 முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. வண்ணம் தீட்டுதல்ஶீ மாறுவேடம்ஶீ திறமைகளை வெளிப்படுத்தும் போட்டி, பாடலுடன் கூடிய அசைவுப் போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இதில் இடம்பெறுகின்றன.
நிறைவாக,கல்வி என்பது பிள்ளைகளுக்கு பெற்றோர் வழங்கக்கூடிய மிக முக்கியமான அடித்தளங்களில் ஒன்றாகும். பிள்ளைகளின் எதிர்காலக் கல்வி வாய்ப்புகள் குடும்பத்தின் நிதிச் சுமையால் பாதிக்கப்படாமல் இருக்க, சிம்பான் எஸ்.எஸ்.பி.என். மூலம் முன்கூட்டியே சேமிப்பைத் தொடங்குவதன் முக்கியத்துவத்தை தேசிய உயர்கல்வி நிதிக் கழகத்தின் இந்த முயற்சி மீண்டும் நினைவூட்டுகிறது.

சிறிய தொகையில் தொடங்கினாலும், சிம்பான் எஸ்.எஸ்.பி.என். திட்டத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் சேமிப்பு காலப்போக்கில் பிள்ளைகளின் உயர்கல்விக்கான வலுவான நிதி முன்னேற்பாடாக உருவெடுக்க முடியும். பரிசுக் குலுக்கலில் கிடைக்கும் வெற்றிகள் சேமிப்பாளர்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கலாம்; ஆனால் பிள்ளைகளின் கல்விக் கனவை நனவாக்க உதவும் நிதிப் பாதுகாப்பை உருவாக்குவதே சேமிப்பின் உண்மையான வெற்றியாகும் என தேசிய உயர்கல்வி நிதிக்கழகம் வலியுறுத்துகிறது.
இதனிடையே, மாநில அளவிலான BMS 2026 கொண்டாட்டம் அக்டோபர் 3ஆம் தேதி பினாங்கு, புக்கிட் மெர்தாஜமிலுள்ள மைடினில் நடைபெறவுள்ளது. அதே நாளில் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களிலும் நிகழ்ச்சிகள் ஒரே நேரத்தில் நடைபெறும். BMS 2026 தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு தேசிய உயர்கல்வி நிதிக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.ptptn.gov.my/-ஐ பார்வையிடலாம்.






















