கோலாலம்பூர்:
நில வரி உயர்வுத் தகராறு காரணமாகத் தங்கள் சொத்துகளைப் பகாங் மாநில அரசு பறிமுதல் செய்த நடவடிக்கை முற்றிலும் நியாயமற்றது என்றும், ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் பெர்ஜாயா ஹில்ஸ் ரிசார்ட் நிறுவனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெரிதும் பாதிக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
ஒரே ஆண்டில் நில வரி 13 மடங்கு உயர்த்தப்பட்டு, 33.7 மில்லியன் ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட்டது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றத்திலும் மேல்முறையீட்டு நீதிமன்றத்திலும் சாதகமான தீர்ப்பு கிடைக்காததால், நிறுவனம் தற்போது கூட்டுரசு நீதிமன்றத்தை (Federal Court) நாடியுள்ளது.
இதனிடையே, பணியாளர்கள் குடியிருப்பு மற்றும் அத்தியாவசிய வசதிகள் பறிமுதல் செய்யப்படுவதைத் தவிர்க்கத் தற்காலிகத் தடை உத்தரவையும் அந்நிறுவனம் பெற்றுள்ளது.
சுமார் 11 கட்ட முறையீடுகளுக்குப் பிறகு, வரித் தொகை 25.75 மில்லியன் ரிங்கிட்டாகக் குறைக்கப்பட்டபோதிலும், நிலுவையில் உள்ள இந்தப் பிரச்சினைக்குச் பேச்சுவார்த்தை மூலம் பகாங் மாநில அரசுடன் இணக்கமான தீர்வு எட்டப்படும் என பெர்ஜாயா ஹில்ஸ் ரிசார்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளது.






















