சட்டவிரோத வர்த்தகத் தடுப்பு குறியீட்டில் மலேசியாவுக்கு 72ஆவது இடம்! ஆசியானில் 6ஆவது இடம்!

பெட்டாலிங் ஜெயா,

சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் திறன் தொடர்பான சர்வதேச தரவரிசையில், உலகின் 158 நாடுகளில் மலேசியா 72ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அதேவேளை, மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்ட 10 ஆசியான் நாடுகளில் மலேசியா 6ஆவது இடத்தைப் பெற்றுள்ளதாகச் சட்டவிரோத வர்த்தகத்திற்கு எதிரான சர்வதேச அமைப்பான Transnational Alliance to Combat Illicit Trade (TRACIT) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான சட்டவிரோத வர்த்தகக் குறியீட்டின் அடிப்படையில் மலேசியா 100 புள்ளிகளில் 50.7 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இது ஆசியான் நாடுகளின் சராசரியான 49.7 புள்ளிகளையும், உலக சராசரியான 49.9 புள்ளிகளையும் விடச் சற்று அதிகமாகும்.

வர்த்தகம், சுங்கம் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் மலேசியா 77.3 புள்ளிகளைப் பெற்றுள்ள போதிலும், இணையவழி வர்த்தக நிறுவனங்கள் போன்ற வணிக அமைப்புகளைக் கண்காணிக்கும் பிரிவில் வெறும் 24.7 புள்ளிகளையே பெற்றுள்ளது. மேலும், சட்டவிரோத வர்த்தகம் தொடர்பான ஒழுங்குமுறை மற்றும் சட்ட அமலாக்கத்தில் ஆசியான் நாடுகளில் மலேசியா 8ஆவது இடத்தில் உள்ளது.

மலேசியாவின் சுதந்திர வர்த்தக வலயங்களில் சுங்கச் சோதனைகள் ஒரே சீராக மேற்கொள்ளப்படுவதில்லை என்றும், மீள் ஏற்றுமதிக்காக அறிவிக்கப்படும் சில பொருட்கள் உரிய வரி செலுத்தப்படாமல் உள்நாட்டுச் சந்தைக்குத் திருப்பிவிடப்படுவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போலிச் சிகரெட்டுகளை அடையாளம் காண உதவும் நிரந்தரத் தகவல் தரவுத்தளம் சுங்கத் துறையிடம் இல்லாததும் குறையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று இணையவழி வர்த்தகத் தளங்களில் விற்பனையாளர்களின் அடையாளங்களைச் சரிபார்த்தல், சட்டவிரோதப் பொருட்களின் விளம்பரங்களைக் கண்டறிதல் மற்றும் மீண்டும் மீண்டும் விதிமீறல்களில் ஈடுபடுவோரைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றிலும் குறைபாடுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 2026ஆம் ஆண்டு மார்ச் மாத மதிப்பீட்டின்படி மலேசியாவின் சிகரெட் சந்தையில் 57 விழுக்காடு சட்டவிரோதச் சிகரெட்டுகள் இடம்பெற்றுள்ளதாகவும், மற்றுமொரு தொழில்துறை மதிப்பீட்டின்படி மதுபானச் சந்தையில் சுமார் 38 விழுக்காடு சட்டவிரோத மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

சட்டவிரோத வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த அமைச்சரவை மட்டத்திலான ஒருங்கிணைப்பாளரை நியமிப்பதுடன், பல்வேறு அமலாக்க அமைப்புகளை உள்ளடக்கிய சிறப்புப் பணிக்குழுவை உருவாக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எல்லைப் பாதுகாப்பில் மட்டும் கவனம் செலுத்துவதால் சட்டவிரோத வர்த்தகத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது என்று TRACIT அமைப்பின் தலைமை இயக்குநர் ஜெஃப்ரி ஹார்டி வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here