ஜோகூர் பாரு,
மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக மூன்று இந்தோனேசியர்களைக் கடத்திய குற்றத்திற்காக, இந்தோனேசியாவைச் சேர்ந்த இருவருக்கு ஜோகூர் பாரு உயர் நீதிமன்றம் தலா 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
நஜ்ரில் இல்ஹாம் மற்றும் இஸ்வாடி இப்ராஹிம் ஆகிய இருவரும், ஜோகூர் பொந்தியானில் உள்ள மீன் வளர்ப்புப் பண்ணையில் உரிய அனுமதியின்றிப் பணிபுரிந்து வந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி, குக்குப் பகுதியில் கடலில் அமைந்துள்ள மிதக்கும் மீன் வளர்ப்புத் தளத்தில் மூன்று இந்தோனேசியர்களைக் கடத்தியதாக இருவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது.
பொந்தியான் போலீசார் அந்தப் பகுதியில் சோதனை நடத்தியபோது, மிதக்கும் வீட்டில் தங்கியிருந்த நான்கு இந்தோனேசியர்களைக் கண்டுபிடித்தனர். அவர்களில் மூவர் மலேசியாவிலிருந்து வெளியேற முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர்களிடம் முறையான அடையாள ஆவணங்கள் இல்லை என்பதும் தெரியவந்தது.
அப்போது, அந்த மூவரையும் படகுகளில் அழைத்துச் செல்ல வந்த நஜ்ரில் மற்றும் இஸ்வாடி ஆகிய இருவரும் போலீசாரைக் கண்டதும் தப்பியோடினர். அவர்களது படகுகளைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மறுநாள் ஏப்ரல் 2ஆம் தேதி, குக்குப் பகுதியில் உள்ள கடையொன்றில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
ஆட்கடத்தல் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 26A-இன் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை இருவரும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, நீதித்துறை ஆணையர் அப்துல் ஃபரீட் அப்துல் கஃபூர் தலா 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார்.
கைது செய்யப்பட்ட ஏப்ரல் 2ஆம் தேதியிலிருந்து சிறைத்தண்டனையைக் கணக்கிடவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தீர்ப்பின்போது, இதுபோன்ற குற்றங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என நீதிபதி எச்சரித்தார்.
சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் மேலும் மோசமான குற்றங்களுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.






















